ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் சிட் பண்ட் நிறுவனம் நடத்தி 85 நபர்களிடம் ரூ.9 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நிறுவன உரிமையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை சேர்ந்த பழனிச்சாமி, செல்வராஜ் உள்ளிட்ட 7 பேர் இணைந்து எஸ்கேடி மற்றும் பிவிடி என்ற பெயரில் சிட் பண்ட் நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் அப்பகுதியை சேர்ந்த முத்தையா உள்ளிட்ட 85 நபர்கள் ரூ. 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது.
மொத்தம் சுமார் ரூ.9 கோடி வரை இப்பகுதி மக்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில் சிட் பண்ட் நடத்தி வந்த 7 உரிமையாளர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றுக் கொண்ட பணத்தை திரும்ப வழங்காமல் முதலீடு செய்தவர்களை கடந்த 8 மாதங்களாக ஏமாற்றி வருவதாக கூறி, பாதிக்கப்பட்டவர்கள் பழனிச்சாமியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பல முறை காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர். புகார் அளிக்க செல்பவர்களை வழக்கறிஞர் மூலம் கலைத்து விடுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். பொதுமக்களின் இந்த போராட்டத்தால் தளவாய்புரம் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments