ஓமலூர் அருகே பீகார் மாநில இளைஞர்களால் இரும்பு கடை உரிமையாளர் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து காடையாம்பட்டி வணிகர்கள் சங்கம் சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தீவட்டிப்பட்டியில், தர்மபுரி மாவட்டம் துறிஞ்சிப்பட்டியை சேர்ந்த சந்தோஷ். இவர் இரும்புக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது கடையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் வேலை செய்து வந்துள்ளனர். கடந்த மாதம் 27-ஆம் தேதி இரவு, கடையை அடைத்து விட்டு, விற்பனை பணத்தை எடுத்துகொண்டு சந்தோஷ் வீட்டுக்கு சென்றார். அப்போது, கடையில் வேலை செய்த இரண்டு வாலிபர்களும் பணத்தை கொள்ளை அடிக்கும் நோக்கத்தோடு, சந்தோஷை கத்தியால் குத்திய நிலையில், சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியிலும், வணிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், காடையாம்பட்டி பகுதியில் வணிகர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி, காடையாம்பட்டி வட்டார வணிகர் சங்கம் சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் காடையாம்பட்டி வணிகர் சங்க தலைவர் அன்பழகன் தலைமையில், தீவட்டிப்பட்டி பகுதியில் இருந்து காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகம் வரை அமைதி ஊர்வலமாக நடைபெற்றது.
அந்த ஊர்வலத்தில் முக்கிய கோரிக்கைகளாக, படுகொலையை வன்மையாக கண்டிப்பதாகவும், காவல் துறை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், மீண்டும் இது போன்ற கொலை கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும், வெளிமாநில ஊழியர்களை வேலைக்கு வைக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், வெளிமாநில ஊழியர்கள் வேலைக்கு வைத்தால் முன்கூட்டியே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தியும் மௌன ஊர்வலத்தை நடத்தினர்.
மேலும், தீவட்டிப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம், நாச்சினம்பட்டி பிரிவு வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகத்தை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் வணிகர் சங்க நிர்வாகிகள், வணிகர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments