மதுரையில் காதலர் தினத்தில் காதலிக்கு கிப்ட் கொடுக்க 10 பவுன் தங்க செயினை திருடி காதலியின் அக்காவிடம் கொடுத்து அனுப்பிய நகைக்கடை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாநகர் மேலமாசி வீதி பகுதியில் பிரபல நகை கடையான பீமா ஜூவல்லர்ஸ் இயங்கி வருகிறது. இங்குள்ள நகை கடையின் கீழ் தளத்தில் கடந்த 13ஆம் தேதி காலை 10 மணியளவில் கடையை திறந்த பின்னர், அனைத்து நகைகளும் சரியாக உள்ளதா என மேலாளர் தலைமையில் ஊழியர்கள் கணக்கு பார்த்துள்ளனர். அப்போது மொத்த நகையில் 10 பவுன் செயின் குறைந்துள்ளது அவர்களுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து நகைகளை மீண்டும் சோதனையிட்ட போது 10 பவுன் மதிப்பிலான செயின் காணாமல் போனது உறுதியாகியிருக்கிறது.
இதனை தொடர்ந்து அதிர்ச்சியடைந்த மேலாளர் கடையின் சிசிடிவி சோதனையிட்டபோது கீழ் தளத்தில் கடையில் பணிபுரிந்த திருச்சி மாவட்டம் தர்ஹா காலனி பகுதியை சேர்ந்த அப்துல் பயாஸ் (26) என்ற ஊழியர், ரூ. 2,40,000 மதிப்பிலான 10 பவுன் தங்க செயினுக்கு பதிலாக கவரிங் செயினை வைத்து விட்டு தங்க நகையை தனது காதலியின் அக்காவான கோயம்பத்தூரை சேர்ந்த அன்னை சத்யா வீதியை சேர்ந்த திவ்யா (29) என்பவரிடம் கொடுத்து அனுப்பியது அவர்களுக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நகைக் கடை மேலாளர் கார்த்திக் அளித்த புகாரின் பேரில் தெற்குவாசல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து நகையை எடுத்துச்சென்று தலைமறைவாக இருந்த நகை கடை ஊழியரான அப்துல் பயாஸ் மற்றும் அவரது காதலியின் அக்காவான திவ்யா ஆகிய இருவரையும் தெற்குவாசல் காவல்துறையினர் கைது செய்து நகையை மீட்டனர்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், திருச்சியை சேர்ந்த பட்டதாரி இளைஞரான அப்துல் பயாஸ் திருச்சி நகை கடையில் பணியாற்றிவந்த நிலையில் திருச்சியில் பீமா ஜூவல்லரி புதிய கடை திறக்க இருக்கிறதை அறிந்து பீமா நகை கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அப்துல் பயாஸ் கோயம்புத்தூரை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், ஆண்டுதோறும் காதலர் தினத்துக்கு பரிசு கொடுத்து காதலியை சர்ப்ரைஸ் செய்து வந்த நிலையில் இந்த ஆண்டும் நகையை கொடுத்து சர்ப்ரைஸ் செய்யலாம் என திட்டமிட்டுள்ளார். அதனை தனது காதலியின் அக்காவிடம் கூறிவிட்டு தான் வேலை பார்த்த மதுரை கடையில் இருந்த 10 பவுன் செயின் ஒன்றை போட்டோ எடுத்து அனுப்பி அதேபோன்ற கவரிங் செயினை வாங்கிக் கொண்டு கடைக்கு வரவைத்து விட்டு கவரிங் நகையை வைத்துவிட்டு காதலியின் அக்காவிடம் தங்க செயினை கொடுத்து அனுப்பியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காதலர் தினத்தன்று தங்க செயினை கிப்ட் கொடுப்பதற்காக தாத்தா இறந்துவிட்டதாக கூறிவிட்டு நகை கடைக்கு லீவு போட்டுவிட்டு சென்றுள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments