தருமபுரி நகராட்சிக்கு சொந்தமான பகுதிகளில் தள்ளு வண்டியில் கடை நடத்தும் தொழிலாளர்கள் மற்றும், சாலையோர வியாபாரிகளிடம் நகராட்சி ஊழியர் தனிப்பட்ட முறையில் 1000 ரூபாய் லஞ்சம் கேட்பதாக 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
தருமபுரி நகராட்சி பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் சில இடங்களில், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் அதிக அளவு கடை நடத்தி வருகின்றனர். இந்த வியாபாரிகளிடம் நகராட்சி சார்பில் முறையாக சுங்கவரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தருமபுரி மாவட்ட சிறு தள்ளுவண்டி தொழிலாளர்கள், முன்னேற்ற சங்கம் வைத்து செயல்பட்டு வருகின்றனர். இந்த வியாபாரிகள் முறையாக அரசு பதிவு பெற்று, மத்திய, மாநில அரசுகளிடம் உரிமம் (Licence) பெற்று, முறையாக வரி செலுத்தி செயல்பட்டு வருகிறார்கள். இச்சங்கத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட சாலையோரமாக வியாபாரம் செய்யும் தொழிலாளர்களும், தள்ளு வண்டி வைத்து வியாபாரம் செய்யும் தொழிலாளர்களும் இணைந்து தொழில் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் தருமபுரி நகராட்சியில் பணிபுரியும் (RI) ஜெயவர்மன் என்பவர், மாவட்ட விளையாட்டு மைதானம் அருகில் கடை வைத்துள்ள வியாபாரிகளிடம், பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் கடைகள் இருப்பதாக கூறி, “ஒழுங்காக கடை வைத்து பிழைத்து கொள்ளுங்கள்” என பகிரங்கமாக மிரட்டியுள்ளார் என சொல்லப்படுகிறது.
மேலும் அவர்களிடம், “இந்த ரோடு தனியாருக்கு சொந்தமான இடம். ஆகவே இந்த இடத்தில் நீங்கள் கடை வைக்க வேண்டுமென்றால், மாதத்திற்கு ஒரு தள்ளுவண்டிக்கு ரூ.1,000/- வீதம் எனக்கு பணம் தரவேண்டும். இந்த பணத்தை உயரதிகாரிகள் வரை சென்று பிரித்து எடுத்துக் கொள்வார்கள்” என்று கூறி பகிரங்கமாக பணம் தர சொல்லி மிரட்டி வந்துள்ளார். “பணத்தை தரவில்லையென்றால் கடை வைக்க அனுமதி தரமுடியாது” என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த தள்ளுவண்டி வியாபாரிகள் நகராட்சி ஆணையாளரிடம் புகார் அளிக்க இன்று சென்றுள்ளனர். ஆனால் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தவர்களிடம், புகாரை வாங்காமல் புகார் வாங்குபவர் வேறு அலுவலர் என, வெவ்வேறு அலுவலர்கள் பெயரை சொல்லி வியாபாரிகளை அலைக்கழித்துள்ளனர்.
இவர்களின் செயலால் மேலும் மனம் நொந்த தள்ளுவண்டி கடை வியாபாரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகார் மனுவில், “தள்ளுவண்டி கடை வியாபாரிகள் இடையூறு இல்லாமல் தொழில் செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் வாழ்வாதாரத்தை பறிக்க நினைத்து எங்களிடம் பணம் கேட்டு மிரட்டும் மேற்படி (RI) ஜெயவர்மன் என்பவர் மீது, கடும் நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments