பந்தே சந்திக்காமல் ரன் அவுட்டான ப்ரூக் - 15 வருடங்களில் முதல்முறை; நியூசி. வரலாற்று சாதனை

LATEST NEWS

500/recent/ticker-posts

பந்தே சந்திக்காமல் ரன் அவுட்டான ப்ரூக் - 15 வருடங்களில் முதல்முறை; நியூசி. வரலாற்று சாதனை

வெலிங்டனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு ரன்னில் தோல்வியடைந்த நிலையில், பாலோ ஆன் ஆன நிலையிலும் நியூசிலாந்து அணி வென்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. இதில் சில சுவாரஸ்ய விஷயங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது இங்கிலாந்து அணி. இதில், மௌண்ட் மாங்கனியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் கடந்த 24-ம் தேதி துவங்கியது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியை வாஷ் அவுட் செய்து தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணியும், டிரா செய்யும் முயற்சியில் நியூசிலாந்து அணியும் களமிறங்கின.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சௌதி, பந்துவீச்சை தேர்ந்தெடுத்ததை அடுத்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் சொதப்ப, அதன்பிறகு நிலைத்து ஆடிய ஹாரி ப்ரூக் (186) மற்றும் ஜோ ரூட் (153) ஆகியோரின் அதிரடி சதங்களால், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 435 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது இங்கிலாந்து அணி. இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை துவங்கிய நியூசிலாந்து அணி, இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்ட்ரூவார்ட் பிராட் ஆகியோரின் பந்துவீச்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து பாலோ - ஆன் ஆன நியூசிலாந்து அணி, 4-வது நாள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162.3 ஓவர்களில் 483 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக கேன் வில்லியம்சன் 132 ரன்களும், டாம் பிளன்டெல் 90 ரன்களும், டாம் லாதம் 83 ரன்களும் குவித்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு, நியூசிலாந்து அணி 258 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்த நிலையில், கடைசி நாள் ஆட்டத்தை இன்று துவங்கியது.

ஆனால், நியூசிலாந்தைச் சேர்ந்த நீல் வாக்னர் மற்றும் கேப்டன் டிம் செளதியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 256 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் இரண்டாவது போட்டியை கைப்பற்றிய நிலையில், இந்த டெஸ்ட் தொடர் டை ஆனது. 

image

இந்நிலையில், இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் 186 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியை வெற்றிப் பாதை நோக்கி அழைத்துசென்ற ஹாரி ப்ரூக், இரண்டாவது இன்னிங்சில் ஒரு பந்து கூட சந்திக்காமல் ரன் அவுட்டாகியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இங்கிலாந்து அணி தோல்வியடைய இதுவும் ஒரு காரணம்.

சொல்லப்போனால் கடந்த 15 வருடங்களில் பந்தே சந்திக்காமல் டெஸ்ட் போட்டியில் ரன் அவுட்டான இங்கிலாந்து வீரர் என்றால் அது ஹாரி ப்ரூக் தான். டெஸ்ட் போட்டிகளில் முதல் 6 போட்டிகளுக்குள் 4 சதங்கள் கடந்த வீரர்கள் பட்டியலில், கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனுடன் ஹார் ப்ரூக் இணைந்திருந்தார். அதே போல் டெஸ்ட் போட்டிகளில் முதல் 9 இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கர், வினோத் காம்ப்ளி போன்ற வீரர்களை பின்னுக்கு தள்ளி ஹாரி ப்ரூக் முதலிடத்தை பிடித்திருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் ப்ரூக் டக் அவுட்டானது ஏமாற்றத்தை அளித்தது. 21.1 ஓவரில் டிம் சௌதி வீசிய முதல் பந்தை சந்தித்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஒரு ரன்னுக்கு எதிர்முனையை நோக்கி ஓட, அப்போது ஹாரி ப்ரூக் அங்கிருந்து கிரீஸுக்குள் வந்து சேர்வதற்குள், ப்ரேஸ்வெல் பந்தை தூக்கி அடிக்க ஒரு பந்து கூட சந்திக்காமலயே ஹாரி ப்ரூக் அவுட்டானார்.

மேலும், பாலோ ஆன்-ல் நியூசிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புதிய சாதனைப் படைத்துள்ளது. அதாவது கடந்த 1894 - ம் ஆண்டு பாலோ ஆன்னில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 10 ரன்கள் வித்தியாசத்திலும், இதேபோல், 1981-ம் ஆண்டு 18 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றது. இதன்பிறகு, கடந்த 2001-ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இங்கிலாந்து, இந்தியாவை அடுத்து, தற்போது நியூசிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, டெஸ்ட் போட்டியில் பாலோ ஆனில் வெற்றிபெற்ற 3-வது அணி என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.

அத்துடன், இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்ற கேன் வில்லியம்சன் (132), அந்த அணியில் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ராஸ் டெய்லர் 7683 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 7787 ரன்கள் எடுத்து சாதனைப் புரிந்துள்ளார் கேன் வில்லியம்சன்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/LrWhmGb
via IFTTT

Post a Comment

0 Comments