உத்தரகாண்டில் 7 வயது வளர்ப்பு மகளை உடல் ரீதியாக கொடுமைப்படுத்திய தம்பதியரை போலீசார் கைது செய்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் வசித்துவரும் தம்பதி ரேணு குமாரி மற்றும் ஆனந்த் குமார். இவர்களில் ரேணு குமாரி டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இத்தம்பதியருக்கு ஜானி என்ற மகன் உள்ள நிலையில், 7 வயது உறவுக்கார சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். இச்சிறுமி ரேணு குமாரியின் அத்தை ஆவார்.
இந்நிலையில், சிறுமியின் உடலில் சூடு வைத்த காயங்கள் இருப்பதை கவனித்த அவரது பள்ளி ஆசிரியை இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து சிறுமியை தனியாக அழைத்து போலீசார் விசாரிக்கையில் தன்னை தத்தெடுத்து வளர்த்துவரும் தம்பதியர் தினமும் கொடுமைப்படுத்தி வருவதாக கூறி அதிரவைத்தார். தத்தெடுத்த முதல் நாளிலிருந்தே தனது அத்தை ரேணு குமாரி தன்னை அடிக்கத் தொடங்கியதாகவும், உடலில் சூடு வைத்ததாகவும், கத்தியால் உடலில் கீறியதாகவும் சிறுமி கண்ணீர்மல்க கூறினார். மேலும் டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய பனிக்காலத்தில் வீட்டின் பால்கனியில் இரவில் ஆடையின்றி உறங்க கட்டாயப்படுத்தியதாக சிறுமி கூறினார்.
இதையடுத்து காயத்தால் அவதிப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். தம்பதியரின் மகன் ஜானி கைது செய்யப்பட்ட நிலையில் அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டாா். ரேணு குமாரி மற்றும் ஆனந்த் குமார் ஆகிய இருவரும் தலைமறைவாகினர். இருவரையும் டெல்லி போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று இரவு அவர்களை கைது செய்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments