ஓமலூர் அருகே திருமணத்தை மீறிய உறவால் தனது இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டுச் சென்ற தாயை ஓமலூர் போலீசார் ஒரு வாரமாக தேடி பாண்டிச்சேரியில் கண்டு பிடித்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள செம்மாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சவுண்டப்பன். இவர், தனது வீட்டில் பட்டு நெசவு தறி அமைத்து நெசவு தொழில் செய்து வருகிறார். இவருக்கும் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு 9 வயதில் ஆண் குழந்தையும் 7 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
இதேபோல் ஓமலூர் அருகேயுள்ள பொட்டியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தனபால். இவருக்கு மனைவியும் ஒரு மகள் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், சவுண்டப்பன் வீட்டருகே உள்ள பட்டுத்தறி கூடத்தில், தனபால் பட்டு நெசவு செய்யும் கூலி வேலை செய்து வந்துள்ளார். அப்போது தனபாலும், சவுண்டப்பன் மனைவி லட்சுமியும் அடிக்கடி சந்தித்த நிலையில், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஏற்காடு, கொல்லிமலை, மேட்டூர் என பல்வேறு இடங்களுக்குச் சென்று வருவதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளனர்.
இதையடுத்து இருவரும் குடும்பத்தை பிரிந்து செல்ல திட்டமிட்டு தனது இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு லட்சுமி தனபாலுடன் தலைமறைவாகிவிட்டார். இதைத் தொடர்ந்து லட்சுமியின் கணவன் ஓமலூர் காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்தனர். ஒருவார தேடுதலுக்கு பிறகு பாண்டிச்சேரியில் அறை எடுத்து தங்கியிருந்த ஜோடியை கண்டுபிடித்து, ஓமலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அப்போது லட்சுமியை பார்த்து அவரது குழந்தைகளும், கணவரும் தங்களுடன் வருமாறு அழுதுள்ளனர். ஆனால், தனக்கு குழந்தைகளும் வேண்டாம், கணவரும் வேண்டாம் என்று கூறிய லட்சுமி, தனது ஆண் நண்பர் தனபாலுடன் தான் செல்வேன் என்று கூறியுள்ளார். அப்போது காதலனுடன் அனுப்ப மறுத்த போலீசார், லட்சுமியை அவரது தாயுடன் அனுப்பி வைத்தனர். இதனிடையே தனபாலின் மனைவி, தனது கணவனிடம் தகராறு செய்து தங்களுடன் வருமாறு கூச்சலிட்டார். இதையடுத்து போலீசார் தனபாலை மனைவி மற்றும் குழந்தைகளுடன் அனுப்பி வைத்தனர். ஆனால், கணவனும் வேண்டாம் குழந்தைகளும் வேண்டாம் என்று கூறிச் சென்ற பெண்ணை பார்த்து அவரது குழந்தைகள் அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/Mb8KWHI
via IFTTT
0 Comments