வீட்டை காலிசெய்து செல்வது போல் நடித்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பத்திரிகை ஆசிரியர் கைது

LATEST NEWS

500/recent/ticker-posts

வீட்டை காலிசெய்து செல்வது போல் நடித்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பத்திரிகை ஆசிரியர் கைது

போரூரில் பத்திரிகையாளர் போர்வையில் கஞ்சா கடத்தி விற்பனை செய்த முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை போரூர் சுற்று வட்டார பகுதிகளில் வாகனங்களில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து போரூர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா கடத்தி வந்த சூர்யா (30), பிரவீன் (29), ஆகிய இரு நிருபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை போரூர் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

image

இதையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கஞ்சா கடத்தலுக்கு தலைவனாக வினோத் குமார் (37), என்பவர் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இவர் ஒரு புலனாய்வு பத்திரிகையில் ஆசிரியராக வேலை செய்வதாகவும், ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி கடத்தி வந்து சென்னை புறநகர் பகுதிகளில் சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர்கள் பிரதீப், குமரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் திருவேற்காடு பகுதியில் தலைமறைவாக இருந்த வினோத்குமார், மற்றும் அவரது உறவினர் தேவராஜ், பாலாஜி உட்பட மூன்று பேரை கைது செய்து போரூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஒரு பத்திரிகையில் ஆசிரியராக இருந்து கொண்டு தனக்கு தெரிந்தவர்களுக்கு நிருபர் என அடையாள அட்டைகளை கொடுத்து கஞ்சா சப்ளையில் ஈடுபட்டதும், லோடு வேனில் வீட்டை காலி செய்து பொருட்களை ஏற்றிக் கொண்டு ஆந்திராவுக்கு சென்று கஞ்சா வாங்கி அதே லாரியில் பொருட்களுடன் கஞ்சாவை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார்.

image

அப்படி வரும்போது போலீசார் மடக்கி விசாரித்தால் வீட்டை காலி செய்து வேறு வீடு மாறி செல்கிறோம் என்றும், தான் ஒரு பத்திரிகை ஆசிரியர் என்றும் போலீசாரிடம் கூறி அடையாள அட்டையை காண்பித்து வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் கடந்த ஒன்றரை ஆண்டில் அவரது வங்கிக் கணக்கில் ரூ.50 லட்சம் வரை பண பறிமாற்றம் நடைபெற்று இருப்பதும் போலீசாரின் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.

image

இதையடுத்து அவரிடமிருந்து 20 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள், மோட்டார் சைக்கிள், வீடு காலி செய்து பொருட்களை எடுத்துச் செல்வது போல் அமைத்து வைத்திருந்த வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இந்த கஞ்சா கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments