காரைக்குடி அருகே நடுவிக்கோட்டையில் திருட வந்த வீட்டீற்குள், மது குடித்து வீட்டின் மெத்தையிலேயே படுத்து தூங்கிய திருடன் மாட்டிக்கொண்ட சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நடுவிக்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேஷன். இவர், குடும்பத்துடன் காரைக்குடி பர்மா காலனியில் வசித்து வருகிறார். வெங்கடேசன் வேறுவேலையாக வெளியில் சென்றிருந்த நிலையில், நடுவிக்கோட்டையில் உள்ள அவரது வீட்டின் வெளிக்கதவு திறந்திருப்பதை கண்ட பக்கத்து வீட்டினர், வெங்கடேசுக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டிற்கு வந்த வெங்கடேஷ் வீட்டை திறக்காமல் நாச்சியாபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலிற்கு பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த நாச்சியாபுரம் காவல் துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது, அதே ஊரைச் சேர்ந்த அஞ்சம்மை என்பவரது மருமகன் சுதந்திர திருநாதன், வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே புகுந்து, பொருட்களை திருடி மூட்டையாக கட்டி வைத்துவிட்டு மது அருந்தியிருந்ததால் போதையில் தூங்கியுள்ளது தெரிய வந்ததது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருட வந்த இடத்தில் ஹாயாக மது அருந்திவிட்டு தூக்கம் போட்டு மாட்டிக்கொண்ட திருடன் குறித்த வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments