நயன்தாராவின் 75-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று முதல் துவங்கியுள்ளது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையும், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவரான நயன்தாரா, கடைசியாக ‘கனெக்ட்’ என்ற ஹாரர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும், ‘ஜவான்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். வருகிற ஜுன் 2-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகை நயன்தாரா அறிமுகமாகவுள்ளார். மேலும், ஜெயம் ரவியின் ‘இறைவன்’ படத்திலும் நயன்தாரா நடிக்கிறார்.
இந்நிலையில், நயன்தாரா நடிக்கவுள்ள 75-வது படம், பூஜையுடன் நேற்று முதல் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. Naad Sstudios, ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது. 'Nayanthara 75' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
‘ராஜா ராணி’ படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில், நடிகை நயன்தாரா, ஜெய் மற்றும் சத்யராஜூடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார். ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த ஆண்டின் இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானபோது, புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணாவை தொலைபேசி வாயிலாக அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தார் நடிகர் ரஜினிகாந்த். இயக்குநர் ஷங்கரிடம் துணை இயக்குநராக பணியாற்றியவர் நிலேஷ் கிருஷ்ணா. இந்தப் படத்தை தயாரிக்கும் Naad Sstudios தான் ‘சார்பட்டா பரம்பரை 2’ படத்தையும் தயாரிக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/63uwvS5
via IFTTT
0 Comments