போலீசாரின் அதிரடி சோதனையில் பதுக்கி வைத்திருந்த 1244 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் மற்றும் 622 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்த போலீசார் 8 பேரை கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை காவல்நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்ணார்பாளையம் பிரிவு அருகே சந்தேகத்திற்கிடமாக 2 இருசக்கர வாகனங்களில் கைப்பையுடன் நின்று கொண்டிருந்த 4 நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள், கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த தினேஷ், ஆனந்த் காரமடையைச் சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் திருவாரூரை சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தனர். அப்போது அதில், 26 கட்டுகள் கொண்ட மொத்தம் 650 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசாரின் தொடர் விசாரணையில் சுரேஷ்குமார், செந்தில்குமார், ஆகியோர் பழைய கட்டிடங்களை தகர்த்து கொடுக்கும் தொழில் செய்து வரும் காரமடையை சேர்ந்த ரங்கராஜ் என்பவரிடம் வேலை செய்து வருவதாகவும், மேற்படி ரங்கராஜ் பழைய கட்டிடங்களை தகர்ப்பதற்காக வெடி பொருளை எவ்வித உரிமையுமின்றி சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாகவும், அவ்வாறு பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் டெட்டனேட்டரில் சிலவற்றை அதிக விலைக்கு கேரளாவிற்கு கடத்திச் சென்று விற்பனை செய்து சம்பாதித்து வருவதாகவும் தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் காவல் துறையினர் ரங்கராஜ் என்பவரை கைது செய்து அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் கொடுத்த தகவலின் பேரில் அவர் வேலை செய்து வரும் மற்றொரு இடத்திலிருந்து எவ்வித உரிமம் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 622 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 350 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் ஆகியவை கைப்பற்றினர். மேற்படி வெடிபொருட்களை ரங்கராஜ் என்பவர் சிறுமுகையைச் சேர்ந்த பெருமாள், அன்னூரைச் சேர்ந்த கோபால் மற்றும் காரமடையைச் சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோர்களிடமிருந்து வாங்கியுள்ளதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து மொத்தம் 1244 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் மற்றும் 622 ஜெலட்டின் குச்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.. இதுகுறித்து தகவல் கிடைக்கப் பெற்றதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதையடுத்து பிடிபட்ட 8 பேரில் 3 பேர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் ஐந்து பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments