ஆன்லைன் ஷாப்பிங்கில் 6 டவல்களை வாங்க முயன்ற மூதாட்டி ஒருவரிடம் இருந்து நூதனமாக ரூபாய் 8 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பகுதியை சேர்ந்த 70 வயது பெண் மூதாட்டி ஒருவர், ஆன்லைன் ஷாப்பிங்கில் ரூ.1,169-க்கு பொருட்களை வாங்கிய நிலையில், அவருடைய அக்கவுண்டில் இருந்து ரூ.19,005 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதனை வங்கிக்கும், காவல்துறைக்கும் தெரிவிக்க முயன்ற அவரிடமிருந்து மொத்தமாய் 8 லட்சத்திற்கும் அதிகமாய் பண மோசடி நடந்துள்ளது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
UPI மோசடி முதல் SMS மோசடி வரை தொடர்ந்து மக்களை ஏமாற்றி பணத்தை திருடுவதற்காக, புதிது புதிதாக பலவழிகளைப் பின்பற்றி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் சைபர் குற்றவாளிகள். இதனால் நாளுக்கு நாள் நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளிலிருந்து புதிது புதிதான ஆன்லைன் மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் டவல்களை வாங்க சென்ற பெண் ஒருவர், ரூபாய் 8 லட்சத்திற்கும் மேலாக பணத்தை இழந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பிடிஐயின் சமீபத்திய அறிக்கையின்படி, மும்பையின் மீரா ரோட் பகுதியைச் சேர்ந்த 70 வயது பெண் மூதாட்டி ஒருவர், ஈ-காமர்ஸ் என்ற இணையதளத்தில் ரூ.1,160 தொகைக்கு 6 டவல்களை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஆன்லைனில் பணம் செலுத்தும் போது, அவரது கணக்கில் இருந்து ரூ.1,169-க்கு பதிலாக ரூ.19,005 பிடிக்கப்பட்டுள்ளது. தவறான பரிவர்த்தனையின் மூலம் தன்னுடைய அக்கவுண்டில் இருந்து அதிகமான பணம் பிடிக்கப்பட்டதை கண்டு அதிர்ந்து போன மூதாட்டி, இந்த மோசடி குறித்து புகாரளிக்க, இணையத்தில் இருந்து புகார் எண்ணை எடுத்து, உதவிக்காக வங்கி உதவி எண்ணை அழைத்துள்ளார். ஆனால் வங்கியைத் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒரு புதிய எண்ணிலிருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது. வங்கியில் இருந்து பேசுகிறோம், நீங்கள் இதற்கு முன்னர் கால் செய்துள்ளீர்கள் என கூறி, பிரச்னை குறித்த விவரங்களை அந்த நபர் கேட்டு தெரிந்துகொண்டுள்ளார். பின்னர் மூதாட்டியின் சமீபத்திய ஆன்லைன் பரிவர்த்தனை மோசடி குறித்து புகாரளிப்பதற்கு உதவிசெய்வதாக கூறி அவர், நீங்கள் பணத்தை உடனே திரும்ப பெற்றுக்கொள்ள ஒரு மொபைல் ஆப்-ஐ தரவிறக்கம் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
வங்கியில் இருந்து தான் பேசுகிறார் என்றும், தனக்கு உதவி தான் செய்கிறார் என்றும் நம்பிய மூதாட்டி, அந்த நபர் கொடுத்த அனைத்து அறிவுரைகளையும் பின்பற்றிய நிலையில், மேலும் மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பிடிக்கப்பட்டுள்ளது. நாம் இதை செய்யவே இல்லையே என பதட்டப்பட்ட அவர், அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைப் பார்த்ததும் நேராக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அதற்கிடையில் அவருடைய வங்கி கணக்கிலிருந்து சுமார் ரூ.8.3 லட்சம் மேலும் திருடப்பட்டது.
இந்த நூதன மோசடி குறித்து பேசிய சைபர் காவல்துறை அதிகாரி, " மூதாட்டியின் அக்கவுண்டில் இருந்து திருடப்பட்ட பணம், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளது. மோசடியில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தக்கட்ட விசாரணை நடந்து வருகிறது" என்று கூறினார்.
ஆன்லைன் ஷாப்பிங் மோசடியை எவ்வாறு தடுப்பது?
ஆன்லைன் மோசடிகள் பெரும்பாலும் இணையவழி பயன்பாடு அதிகம் தெரியாதவர்களையும், அதிலும் குறிப்பாக வயது முதிர்ந்த மூத்தவர்களையும் குறிவைத்தே நடத்தப்படுகிறது. இத்தகைய மோசடிகளை தவிர்க்க பெரிய தொழில்நுட்பம் சார்ந்த அறிவு இருக்கவேண்டும் என்பதெல்லாம் இல்லை, தனி ஒரு சாதாரண நபராக சில விசயங்களை செய்தாலே பெரும்பாலும் இதுபோன்ற வலைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
* ஆன்லைன் ஷாப்பிங் என்பது தற்போது நம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. அதனால் அதனை பயன்படுத்தாமல் தவிர்த்து விட வேண்டும் என்பது, எப்போதும் சிறந்த வழியாக இருக்காது. ஆகையால் நாம் எப்போதும் ஆன்லைன் மோசடி குறித்தும், அதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விழிப்புடன் இருப்பது முக்கியமானது.
* ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வதற்கு முன், அந்த இணையதளத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டியது அவசியம். இணையதளத்தின் SSL சான்றிதழ், ரேட்டிங்க்ஸ் மற்றும் பாதுகாப்பான கட்டண நுழைவாயில் உள்ளதா போன்றவற்றை எல்லாம் சரிபார்த்து பின் பயன்படுத்தலாம்.
* வங்கிக் கணக்கு விவரங்கள், கடவுச்சொற்கள் மற்றும் OTP போன்ற முக்கியமான தகவல்களை தொலைபேசியில் யாருடனும் பகிர்வதைத் தவிர்ப்பது நல்லது.
* வங்கி உதவி எண்கள், அதிகாரப்பூர்வ கஸ்டமர் கேர் எண்கள், அப்ளிகேசன்ஸ் போன்றவற்றை சரியானது தானா என உறுதி செய்துவிட்டு பயன்படுத்தவேண்டும். எது உண்மையான ஹெல்ப் எண் என்று தெரியவில்லை என்றால் வங்கி பாஸ்புக்கில் உண்மையான ஹெல்ப்லைன் எண்ணை நீங்கள் சரிபார்க்கலாம் அல்லது உண்மையான வங்கி இணையதளத்தைப் பார்வையிடலாம். கூகுளில் கிடைக்கும் எண்கள் அல்லது மற்ற வெப்சைட்டுகளில் கிடைக்கும் எண்களை கண்மூடித்தனமாக டயல் செய்ய வேண்டாம்.
* வங்கியிலிருந்து கால் செய்கிறோம், வங்கியில் பணி செய்யும் நபர் என்று கூறும் எதையும் நம்ப வேண்டாம். வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை எப்போதும் அழைப்பதில்லை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments