கோவையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் மாநகர் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாநகரில் கஞ்சா விற்பனை செய்துவரும் பலரை காவல்துறையினர் தொடர்ந்து கைதுசெய்து வருகின்றனர். அதன்படி சில தினங்களுக்கு முன் சங்கனூர் பகுதியை சேர்ந்த சூரியபிரகாஷ் என்பவரை கோவை மாநகர காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 450 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான கௌதம் என்பவர் தலைமறைவாக இருந்துகொண்டு அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மூலம் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கௌதமின் மனைவியான மோனிஷாவின் இல்லத்திற்குச் சென்று சோதனை மேற்கொண்டதில், கார் ஒன்றில் சுமார் 1500 கிராம் கஞ்சாவும், 4000 ரூபாய் பணமும் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து வீட்டின் உள்ளே சென்று சோதனை மேற்கொண்டபோது கஞ்சா விற்ற பணத்தில் தங்க நகைகள் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து மோனிஷா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அவரது சகோதரி தேவிஸ்ரீ மற்றும் அவரது தாயார் பத்மா ஆகியோரை காவல்துறையினர் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய கார், இருசக்கர வாகனம், எடை போடும் இயந்திரம், கஞ்சா விற்ற பணத்தில் வாங்கிய சுமார் பத்து சவரன் தங்க நகைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.
கோவை மாநகர துணை ஆணையர் சந்தீஷ் தலைமையில் சாய்பாபா காலனி சரக உதவி ஆணையர் பஷீனா மேற்பார்வையில் இரத்தினபுரி காவல்நிலைய ஆய்வாளர் மீனாகுமாரி, சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர் ஜெகதீசன் உள்ளிட்ட குழுவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments