பாஜக தொண்டர்களை யாரும் தொட்டு கூட பார்க்க முடியாது; மக்களின் பிரச்சினைகளை பாஜக தட்டி கேட்கும் என்று கிருஷ்ணகிரியில் கட்சி அலுவலக திறப்பு விழாவில் அண்ணாமலை பேசியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலக திறப்பு விழா மற்றும் 9 மாவட்ட பாரதிய ஜனதா கட்சி
அலுவலகங்கள் காணொலி காட்சி மூலமாக திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டு கிருஷ்ணகிரி மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழகத்தில் எப்போதும் இல்லாத ஒரு சரித்திரம் இப்போது நமது கண் முன்பு நடக்கிறது. ஒரே நேரத்தில் 10 இடங்களில் நமது கட்சி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜே.பி. நட்டா தலைவராக பொறுப்பேற்ற போது தமிழகம் வந்தார். அப்போது மாநில தலைவராக இருந்த முருகன், அவரை அழைத்து சென்று திருவள்ளூர் கட்சி அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். அந்த மாவட்ட அலுவலகத்துடன் சேர்த்து இன்றைய தினம் 10 மாவட்ட அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. திரிபுரா, மேகாலாயா, நாகலாந்து மாநிலங்களில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. நம்மை பொறுத்தவரையில் கட்சி அலுவலகம் என்பது நமக்கு கோவில். இந்த கட்சி தியாகத்தால் வளர்க்கப்பட்ட கட்சி. எத்தனையோ பேர் கட்சி துண்டு அணிந்து உயிர் விட்டு இருக்கிறார்கள்.
இன்றைய தினம் கட்சி அலுவலகங்கள் திறப்பதற்கு காரணமாக இருந்த முன்னாள் தலைவர்கள் எல்.முருகன், தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோருக்கு எனது நன்றிகள். தமிழகத்தில் பாஜக தனி முத்திரை பதித்து வருகிறது. எதிர்த்து குரல் கொடுக்கிறோம். ஒரு தொண்டன் எதிர்த்து கேட்கிறான். சிறை செல்கிறான். மீண்டும் வெளியே வந்து எதிர்த்து கேட்கிறான். மக்கள் பிரச்சினைகளை தட்டி கேட்போம். அதற்காக எந்த பிரச்சினைகள் வந்தாலும் தயங்க மாட்டோம். இது தொண்டர்களுக்கான கட்சி. இதை யாரும் தொட்டு கூட பார்க்க முடியாது.
தி.மு.க. அரசு அமைந்து 24 மாதங்கள் ஆகிறது. அதை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இன்னும் 12 மாதங்களில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வர உள்ளது. விவசாயிகளுக்கு, மகளிருக்கு, இளைஞர்களுக்கு என எண்ணற்ற திட்டங்களை பிரதமர் மோடி நிறைவேற்றி உள்ளார். 2024 தேர்தலில் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்காக நாம் வேகமாக பணியாற்ற வேண்டும். அடிமட்டத்தில் இருந்து நாம் கட்சியை பலப்படுத்திட வேண்டும். நமது கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பணியாற்ற வேண்டும். நமது கூட்டணி எம்.பி.க்களை நாடாளுமன்றத்திற்கு நாம் அனுப்ப வேண்டும். மக்களின் பிரச்சினைகனை முன்னெடுத்து உங்களுக்கான அரசாக பாஜக உள்ளது” என்று பேசினார்.
மத்திய அமைச்சர் எல் முருகன் பேசியதன் விவரம்:-
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் எல் முருகன், “நடந்து முடிந்த வடமாநில தேர்தலில் நாம் அமோக வெற்றி பெற்றுள்ளோம். இது மோடி அரசுக்கு மக்கள் அளித்த சான்றாகும். பாஜக தியாகத்திற்கு பெயர் போன கட்சியாகும். இந்த நேரத்தில் இக்கட்சிக்காக உழைத்து மறைந்த ஆடிட்டர் ரமேசுக்கு புகழஞ்சலி செலுத்துகிறேன். பாரதியஜனதா அரசின் திட்டங்களை நாம் வீடு, வீடாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
பா.ஜனதா ஆட்சிக்கு வந்த 9 ஆண்டுகளில் நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் வளர்ச்சிக்காக பட்ஜெட். தமிழகத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு பா.ஜனதா ஆட்சியில் ரெயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. மோடி அரசின் திட்டங்களை, பயன்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/G4mEdgM
via IFTTT
0 Comments