ஈரோடு அருகே திருமணம் ஆன உறவுக்கார பெண்ணுடன் நெருங்கி பழகி வந்த இளைஞர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதால் இளைஞர் மீது சூடான பாமாயிலை அந்தப் பெண் ஊற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி வர்ணாபுரம் பகுதியில் கார்த்திக் என்ற இளைஞர், தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். பெருந்துறையில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் பணியாற்றி வரும் இவருக்கும், இவரது உறவினரான மீனாதேவி என்ற திருமணமான பெண்ணுடன் நெருங்கி பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் கார்த்திக் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக மீனாதேவியிடம் கூறியதை அடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று மாலை பவானி மண்டபம் வீதியில் உள்ள மீனாதேவி வீட்டில் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மீனாதேவி, அடுப்பில் இருந்த சூடான பாமாயிலை கார்த்திக் மீது ஊற்றியுள்ளார்.
இதில், முகம் மற்றும் கழுத்து பகுதியில் பலத்த படுகாயமடைந்த கார்த்திக் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த பவானி போலீசார், இளைஞர் கார்த்திக் மீது சூடான பாமாயிலை ஊற்றிய மீனா தேவியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments