நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை ரூ. 4.60-ல் இருந்து 10 காசுகள் குறைத்து ரூ. 4.50 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் 6 கோடி கோழிகள் வளர்க்கப்பட்டு, அவற்றின் வழியாக தினசரி 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. இவற்றில் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு தினசரி 50 லட்சம் முட்டைகளும், கேரளாவுக்கு ஒரு கோடி முட்டைகளும், மீதம் உள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், பாண்டிச்சேரிக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 16-ம் தேதி முதல், முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை ரூ. 4.60 என கடந்த 10 நாட்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 10 காசுகள் பண்ணை கொள்முதல் விலை குறைக்கப்பட்டு முட்டை ஒன்றின் விலை ரூ. 4.50 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
விலை குறைப்பு குறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், “தமிழகத்தில் பள்ளி தேர்வுகள் துவங்கிய நிலையில் சத்துணவு திட்டத்திற்கு முட்டை அனுப்புவது சற்று குறைந்துள்ளது. முட்டை விற்பனையும் குறைந்து முட்டைகள் அதிகளவு தேக்கம் ஏற்பட்டுள்ளது. முட்டை விற்பனையை உயர்த்தும் நோக்கத்தில் பண்ணை கொள்முதல் விலை குறைக்கப்பட்டிருக்கிறது” என தெரிவித்தனர்.
அதேசமயம் கறிக்கோழி விலை கடந்த 5 நாட்களில் கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த 21-ம் தேதி உயிருடன் ஒரு கிலோ கறிக்கோழி 82 ரூபாயிலிருந்து 4 ரூபாயும், 22-ம் தேதி 3 ரூபாயும், 24-ம் தேதி 6 ரூபாயும் உயர்ந்து 95 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்றும் 7 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று உயிருடன் ஒரு கிலோ கோழி 102 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விலை உயர்வு குறித்து கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூறுகையில், “கடந்த சில வாரங்களாக கறிக்கோழி விலை குறைவாக இருந்து நிலையில், அதிக நஷ்டத்தை சந்தித்து வந்தோம். அதனை தவிர்க்கும் பொருட்டு தற்பொழுது உற்பத்தியை சற்று குறைத்துள்ளதால் தேவை அதிகரித்து, விலை உயர்ந்து வருகிறது. இவ்விலை மேலும் உயரும்” என்றும் தெரிவித்தனர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/Tz38CJc
via IFTTT
0 Comments