புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசாததால் இருசக்கர வாகனத்தில் பயணித்த தாயும் மகனும் விபத்துக்குள்ளாகியுள்ளனர். இதில் தாய் வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டு, சாலையில் விழுந்து பலியாகியுள்ளனர். இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற மகன், படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தேனி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசாததால், வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் உள்ளது. அதனால் விபத்து அதிகம் நிகழ்வதாக பொதுமக்கள் கூறுகின்றனர். தேனி மாவட்டம் போடி அருகே குப்பி நாயக்கன்பட்டி சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் தீபக்குமார். இவர் தனது தாயார் அம்சவல்லியுடன் பெரியகுளத்தில் உள்ள உறவினரின் கருமாதி நிகழ்விற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்பொழுது பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த வேகத்தடை மீது இருசக்கர வாகனம் சென்றுள்ளது. அங்கு வேகத்தடை இருப்பது தெரியாததால், வாகனம் வேகமாக சென்றுள்ளது. இதில் பின்னே அமர்ந்திருந்த தீபக்கின் தாய், இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மகன் தீபக் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கு சென்ற பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் பலியான தாய் அம்சவள்ளியின் உடலை பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து படுகாயங்களுடன் இருந்த மகன் தீபக்கை பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து பெரியகுளம் தென்கரை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் கைலாசபட்டி பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக புதிதாக அமைக்கப்பட்ட மூன்று வேகத்தடைகளிலும் நெடுஞ்சாலை துறையினர் வெள்ளை வர்ணம் பூசாததால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments