பொள்ளாச்சி அருகே சினிமாவில் நடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால், துணை நடிகை ஒருவர் நண்பரை வைத்து தாக்கியதில் காயங்களுடன் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி அடுத்த நல்லிகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு ரம்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆன நிலையில், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரம்யா தனது இரு குழந்தைகளுடன் கோவையில் தனது தாயின் வீட்டில் வசித்து வருகிறார். இவர் சின்னத்திரையில் துணை நடிகையாக பணியாற்றி வருகிறார். ரம்யா அவ்வப்போது குழந்தைகளை கணவரிடம் காட்ட நல்லிகவுண்டன் பாளையம் வருவது வழக்கம்.
இந்நிலையில் ரம்யா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வரும்போது, மர்ம நபர் ஒருவர் வகானத்தை வழிமறித்து ரமேஷை பிளேடால் கழுத்து பகுதியில் வெட்டியதில் ரமேஷ் படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் விசாரணை நடத்திய போலீசார் மனைவி ரம்யாவின் மீது சந்தேகம் வரவே, அவரை பிடித்து தீவிர விசாரணையில் ஈடுப்பட்டனர். அப்போது தான் துணை நடிகையாக நடிப்பது தனது கணவருக்கு பிடிக்கவில்லை என்றும், இதனால் இருவருக்கும் அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டதாகவும், இதை தாங்க முடியாததால் தன்னுடன் பணியாற்றும் துணை நடிகர் டேனியல் என்பவரை வைத்து கணவர் ரமேஷை மனைவியே தாக்கியது அம்பலமானது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில், டேனியல் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ரமேஷின் வீட்டை 10 லட்சம் ரூபாய்க்கு கேட்டதாகவும், அதற்கு ரமேஷ் மறுத்தால் ரம்யாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டி, ரமேஷிடம் இருந்து மிரட்டி குறைந்த விலைக்கு வீட்டை விலை பேச முடிவு செய்ததும் விசாரணையில் அம்பலமானது. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கை பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments