ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ. 20 லட்சம் கடன். மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மெடிக்கல் ரெப்.
தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில் இதற்கான விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம் தேவைப்படுகிறது. நேற்று ஆன்லைன் சூதாட்டத்தால் சென்னையை அடுத்த மாடம்பாக்கத்தில் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், கணபதி காலனியை சேர்ந்தவர் வினோத்குமார்(36), இவருக்கு மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்து வந்த இவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் ஆன்லைனில் சூதாட்டம் விளையாடுவதற்கு பல்வேறு வகையில் லோன் ஆப்களில் சுமார் 20 லட்சம் வரை கடனாக பெற்று ஆன்லைனில் சூதாடி பணத்தை இழந்துள்ளார்.
மனைவியும் ஆன்லைன் சூதாட்டத்தை கைவிடுமாறு கூறிவந்த நிலையில் , வினோத் குமாரால், இதை கைவிட இயலவில்லை. இந்நிலையில் வீட்டில் மனைவி இல்லாத சமயம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரவு பணி முடித்து மனைவி வீடு திரும்பிய போது கணவன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார், உடனடியாக, கணவரை மீட்டு ஆம்புலன்ஸ் வரவழைத்து சோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிந்தது. இச்சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments