கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனின் வீடு மற்றும் அவரது இயேசு அழைக்கிறார் அமைப்பிற்கு சொந்தமான இடங்களில் 3ஆவது நாளாக வருமானவரித்துறை சோதனை தொடர்கிறது. வெளிநாட்டில் தங்கியுள்ள அவரை சென்னை வரவழைத்து விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கிறிஸ்தவ மதபோதகரான பால் தினகரனின் சென்னை இல்லம் மற்றும் அவர் நடத்தி வரும் இயேசு அழைக்கிறார் அமைப்பிற்கு சொந்தமாக சென்னை மற்றும் கோவையில் உள்ள இடங்களில் வருமானவரித்துறையினர் மூன்றாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அடையாறு ஜீவரத்தினம் நகரில் உள்ள பால் தினகரன் வீடு, அடையாறு, பாரிமுனையில் உள்ள 'இயேசு அழைக்கிறார்' ஜெபக் கூட அலுவலகங்கள், தாம்பரத்தில் உள்ள SEESHA அறக்கட்டளை அலுவலகம், கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும் வரி விலக்கில் விதி மீறல்கள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் வந்ததாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளிநாடுகளிலிருந்து கிடைத்த நன்கொடைகளை மறைத்ததாகவும், பல்கலைக்கழகத்தின் வருமானம் உள்ளிட்டவற்றை குறைத்து காட்டி முறைகேடு நடந்திருப்பதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அறக்கட்டளைக்கு கிடைத்த வருவாயை விட செலவுகளை அதிகமாக கணக்கு காட்டி முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்ததாகவும் கூறுகின்றனர். பால் தினகரனின் வெளிநாட்டு, உள்நாட்டு முதலீடுகள் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். பல்கலைக்கழக நிர்வாகிகள், கணக்காளர்கள், பட்டய கணக்கர்களையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஹார்டுடிஸ்க், பென் டிரைவ், வங்கி தொடர்பான ஆவணங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. ஆனால் சோதனை முடிந்த பிறகே அது பற்றி தெரிவிக்க முடியும் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வருமானவரித்துறையினர் சோதனையின் போது பால் தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கனடாவில் இருப்பது தெரிய வந்துள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். பால் தினகரனை சென்னைக்கு வரவழைத்து விசாரிக்க வருமானவரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3o86nR1
via IFTTT
0 Comments