மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!

LATEST NEWS

500/recent/ticker-posts

மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!

எந்த உயிரையும் கொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது. ஆனால், காட்டின் வளத்துக்கு முக்கிய காரணமாக விளங்கும் யானை ஒன்று மனிதர்களின் கொடூர புத்தியால் உயிரிழந்துள்ளது. இறந்த யானையின் பிரேத பரிசோதனை அறிக்கை பல திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் சுற்றிக் கொண்டிருந்த காட்டுயானை, அடிக்கடி ஊருக்குள் வருவது வழக்கம். அப்படித்தான் சில தினங்களுக்கு முன் நான்கு மணிநேரம் சாலையிலேயே நின்று கொண்டிருந்தது யானை. வனத்துறையினர் பழங்களை கொடுத்து திசைத் திருப்பி காட்டுக்குள் அனுப்பி வைத்தனர். ஆனால் அதன் பிறகுதான் அந்த கொடூரம் நடந்தது. யானையின் காதின் ஒருபகுதி அறுந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. வனத்துறையினர் தகவல் தெரியவந்து மாத்திரைகளை பழத்திற்குள் வைத்துக்கொடுத்தனர். அதன்பிறகு ரத்தம் கொட்டுவது கொஞ்சம் கட்டுக்குள் வந்தது.

image

ஆனால் இந்த யானைக்கு ஏற்கனவே முதுகில் பெரிய காயம் இருந்தது. முதுகில் ஏற்பட்ட காயம் மற்றொரு யானையால் உண்டானது என தெரிகிறது. 3 மாதங்களாக காயத்துடன் சுற்றிக்கொண்டிருந்த யானையை கடந்த மாதம்தான் மயக்க ஊசி செலுத்திப் பிடித்து மருந்து தந்து பராமரித்து அனுப்பி வைத்தனர் வனத்துறையினர். அதற்குள் காது அறுந்து காயம் பட்டதையடுத்து யானையை முதுமலை கொண்டு சென்று முகாமில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். இதற்காக அழைத்துச் செல்லப்பட்டபோது வழியிலேயே யானை உயிரிழந்தது. 3 மாத காலமாக யானைக்கு சிகிச்சை தந்த வனத்துறையினர் யானையின் இறப்பை கண்டு கதறி அழுத காட்சி காண்போரை உருக்குவதாக இருந்தது.

யானையின் பிரேத பரிசோதனையில், அதன் காது பகுதியில் பெட்ரோல் மற்றும் தீயை கொண்டு கொடூரமாக தாக்கி காயம் ஏற்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. ஆசிட் கொண்டும் கொடூரமாக தாக்கி இந்த காயத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்கிறார்கள் வனத்துறையினர். அதேபோல யானையின் முதுகு பகுதியில் உள்ள காயமும் மிகவும் ஆழமாக இருந்தது. இதனால் யானையின் 2 விலா எலும்புகள் உடைந்துள்ளன. யானையின் காதில் ஏற்பட்ட காயத்தால் 40 லிட்டர் அளவுக்கு ரத்தம் வெளியேறியுள்ளது. காயங்களாலும், ரத்த இழப்பாலும் யானை இறந்திருக்கிறது என்றனர் வனத்துறையினர்

image

உயிரிழந்த யானையில் உருவப்படத்தை வைத்து மசினக்குடி பஜார் பகுதியில் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், காவல்துறை மற்றும் வனத்துறையினர் என பல தரப்பினரும் யானைக்கு அஞ்சலி செலுத்தினர்.

யானை மீது இத்தகைய கொடூரமான தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இதன் பிறகாவது யானைகள் காக்கப்பட வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments