மூத்த பழம்பெரும் திரைப்பட நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தனது 98-ஆவது வயதில் காலமானார். அவருக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
மலையாளப் படங்களில் தாத்தா வேடங்களில் நடித்து பிரபலமானவர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. தமிழிலும் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் கே சம்பந்தம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 98 வயதான இவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதன்பின் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததால் அவர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் அதன்பின் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உயிர், மருத்துவமனையிலேயே பிரிந்தது.
இதனிடையே உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மறைவிற்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இததொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், “73ஆவது வயதில் நடிக்க வந்து 18 வருடங்களாக மலையாளிகளைச் சிரிக்கவைத்தவர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. இளமை துள்ளும் தாத்தாவாகக் கலையுலகில் வளையவந்தவர். இன்னும் 2 ஆண்டுகளில் சதமடிக்கவேண்டியவர் இன்று நம்மை நீங்கியிருக்கிறார். நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.” என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரியின் இறுதிச் சடங்கு இன்று காலை 11 மணிக்கு கோரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றியே அவரது இறுதிச் சடங்கு நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
=
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3sKClWL
via IFTTT
0 Comments