சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற திமுக மக்கள் வார்டு சபை கூட்டத்தில் ஸ்டாலினை நோக்கி திடீரென மூதாட்டி ஒருவர் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்புதான் முதியோர் உதவித் தொகை பெற்றுத்தரும்படி ஸ்டாலினிடம் அவர் கோரிக்கை விடுத்தது தெரியவந்தது.
தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்தி வரும் திமுக, நகரப் பகுதிகளில் வார்டு சபைக் கூட்டத்தையும் நடத்தி வருகிறது. சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற வார்டு சபைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராயபுரத்திற்கும் திமுகவுக்கும் உள்ள வரலாறை நினைவு கூர்ந்தார். பின்னர் அப்பகுதி மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அப்போது, கூட்டத்திலிருந்த மூதாட்டி ஒருவர் ஸ்டாலினை நோக்கி நடந்து சென்றார். அதைக் கண்டு பதறிய திமுக நிர்வாகிகள் மூதாட்டியை தடுக்க முயன்றனர். ஆனால், அவர்களை பொருட்படுத்தாமல் ஸ்டாலினிடம் சென்ற மூதாட்டி, சில வினாடிகள் அவரிடம் பேசிவிட்டு திரும்பினார். இதுதொடர்பாக அந்த பாட்டியிடம் விசாரித்தபோது, முதியோர் உதவித் தொகைக்கு எழுதி கொடுத்தும் கிடைக்காதது குறித்து ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்ததாகவும், திமுகவினர் மூலம் விரைவில் கோரிக்கையை நிறைவேற்றுவதாக ஸ்டாலின் உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தின்போது, மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் 30 கோடி ரூபாய் முறைகேட்டில் அமைச்சர் ஜெயக்குமார் ஈடுபட்டுள்ளதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments