"என் அப்பா ஒரு விவசாயி. எங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டதெல்லாம் விடாமுயற்சிகள் மட்டும்தான்" என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவராக ஆட்டமிழந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் இருவரும் பாட்னர்ஷிப் அமைத்து ரன் சேர்த்தனர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இதமட்டுமல்லாமல் பவுலிங்கில் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார் ஷர்துல் தாக்கூர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள ஷர்துல் தாக்கூர், "2018-இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகமானேன். ஆனால், பத்து பந்துகளை மட்டுமே வீசிய நிலையில் காயமடைந்தேன். அதன் பின்பு 2 ஆண்டுகளுக்கு பின்பு டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இந்த இரண்டு ஆண்டு காலம் மிகவும் சோதனையாக அமைந்தது. ஆனால் நான் நிறையக் கற்றுக்கொண்டேன்" என்றார்.
மேலும், "என்னுடைய தந்தை ஒரு விவசாயி. எங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டதெல்லாம் தொடர்ந்து முயற்சி செய்வதும் போராடுவதும் மட்டும்தான். நான் விவசாயம் செய்வதில்லை. ஆனால், கிரிக்கெட்டில் தொடர்ந்து நீடிப்பதற்கான விடாமுயற்சிகளை நான் செய்துக்கொண்டு இருந்தேன். ஒருமுறை ரவி சாஸ்திரியிடம் நான், ’எனக்கு ஒன்று இரண்டு போட்டிகளில்தான் வாய்ப்பு கிடைக்கிறது. அது எனக்கு அழுத்தத்தை தருகிறது’ என கூறினேன். அதனை அழுத்தமாக பார்க்காதே வாய்ப்பாக பாரு என அறிவுறை வழங்கினார்" என்றார் ஷர்துல் தாக்கூர்.
தொடர்ந்து பேசிய அவர், "பள்ளி காலத்தில் இருந்தே நான் ஆல் ரவுண்டராகவே விரும்பினேன். அதனால் பேட்டிங் செய்யும்போது என்னை ஒரு முழுமையான பேட்ஸ்மேனாக உணர்ந்தே ஆடுவேன். அதனால்தான் என்னால் முறையான ஷாட்டுகளை ஆட முடிந்தது. மும்பை ரயில்களில் அமர்வதற்கு இடம் கிடைக்க போராடுவதற்கு தனி திறமை வேண்டும். அதுதான் கடினம், வேகப் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது அவ்வளவு கடினமல்ல" என்றார் ஷர்துல் தாக்கூர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3631Nx8
via IFTTT
0 Comments