முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 31 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. மிக முக்கியமான வழக்கு என்பதால் இந்த தீர்ப்பை தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.
ஸ்ரீபெரும்புதூரில் 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பேரறிவாளன் மீது வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கில் அவர்கள் அனைவருக்கும் கீழமை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில் அவர்களில் 9 பேர் 1999-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர். பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ஆகியோருக்கும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
திருப்புமுனை...
இந்த சூழலில், கடந்த 2014-ம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்ட நால்வரின் கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. இந்த வழக்கில் மேற்குறிப்பிட்ட உத்தரவுதான் திருப்புமுனையை ஏற்படுத்தியது எனக் கூறலாம். இதனைத் தொடர்ந்து, தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் சார்பில் 2016-ம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்யப்பட்டது. இந்த வழக்கு நடைபெற்று கொண்டிருந்த போதே தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி பேரறிவாளன் தனி மனுவை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்த இடைப்பட்ட காலத்தில் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் 7 பேரை விடுதலை செய்யக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு 2018-ம் ஆண்டு கருத்துரு அனுப்பியது. இதனை ஆய்வு செய்த மத்திய அரசு, சிபிஐ வசம் இருக்கும் ஒரு வழக்கில் மாநில அரசு முடிவெடுக்க அதிகாரம் கிடையாது எனக் கூறி அந்த கருத்துருவை நிராகரித்தது. இதையடுத்து, 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எழுவரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மத்திய அரசுக்கு சரமாரியான கேள்விகள்...
இந்நிலையில்தான், பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரும் மனு மீது மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து காரசாரமான வாதங்களை முன்வைத்து வந்தன. அப்போது மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் சரமாரியான கேள்விகளை நீதிபதிகளும் எழுப்பியிருந்தனர்.
குறிப்பாக, "இந்த வழக்கில் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே முடிவு எடுக்கும் உரிமை உள்ளது என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்க முடியாது. இந்த விவகாரம் மாநில அரசு தொடர்பானது. அதனால் மாநில அரசுக்கே இதில் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது. ஆளுநர் தனக்கு வழங்கப்பட்டு இருக்கும் சுதந்திரத்தை வைத்து அமைச்சரவை எடுக்கும் முடிவை மதிக்காமல் இருப்பது சரியல்ல" என நீதிபதிகள் கடுமையாக சாடியிருந்தனர். அதேபோல, மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் எப்படி அனுப்பலாம்? எனவும் நீதிபதிகள் கேள்வியெழுப்பி இருந்தனர். மேலும், "பேரறிவாளன் ஆயுள் தண்டனை கைதி என்பதால் அவரின் விடுதலையில் ஆளுநர்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தவறு" என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
அனைத்துக்கும் மேலாக, "பேரறிவாளனை யார் விடுதலை செய்வது என்ற அதிகார மோதலுக்கு இடையில் பேரறிவாளன் ஏன் சிக்கி தவிக்க வேண்டும்?" என கேள்வியெழுப்பிய நீதிபதிகள், "அவரை ஏன் நாங்களே விடுதலை செய்ய கூடாது" எனவும் வினவியிருந்தனர். "அமைச்சரவை முடிவு எடுத்த விவகாரத்தில், ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் குறித்து முடிவெடுக்க போகிறோம்" எனவும் நீதிபதிகள் காட்டமாக கருத்து தெரிவித்தனர்.
இவ்வாறு இந்த வழக்கை பொறுத்தவரை, நீதிபதிகளின் கருத்துகள் அனைத்துமே பேரறிவாளனுக்கு சாதகமாகவே இருந்தன. இந்த சூழலில்தான், இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. இன்றைக்கு இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/eXo3Ixv
via IFTTT
0 Comments