ரயில் மூலமாக ஆந்திராவிலிருந்து சாராயத்தை சென்னை கொண்டு வந்து மெரினா கடற்கரை மணலில் புதைத்து விற்ற வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மெரினா கடற்கரை மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சாராயத்தை ஜேசிபி மூலம் தோண்டி எடுத்துள்ளனர் காவல்துறையினர்.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை மெரினா கடற்கரை மணலில் சாராயம் புதைத்து வைத்து விற்பனை செய்யப்படுதாக மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தனிப்படை போலீசார் ஆய்வு செய்ததில் மெரினா கடற்கரையில் உள்ள நேதாஜி சிலைக்கும், கண்ணகி சிலைக்கும் இடைப்பட்ட மணற்பரப்பில் மணலில் கள்ளச்சாராயம் புதைத்து வைத்து இருப்பது அவர்களுக்கு தெரிந்துள்ளது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு மேலும் சோதனை செய்துள்ளனர். அதில் சில சிறிய பாட்டில்கள், 2 லிட்டர் தண்ணீர் பாட்டில் போன்றவற்றில் சாராயத்தை மணலில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இப்படி வைக்கப்பட்டிருந்த மொத்தம் 35 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனை மணலில் புதைத்து வைத்து விற்பனை செய்து வந்த மகாராஷ்டிரா மாநிலத்தை ஜென்தூஸ் கோஸ்லயா, சில்பா போஸ்லே, சுனந்தா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து மெரினா காவல் நிலைய போலீசார் சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களுடன் சேர்ந்து வசித்து வந்த 35 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். நாடோடிக் கூட்டமாக இருந்த இவர்கள், குடும்பமாக இங்கு தங்கி வருவதாகவும், இவர்கள் ஆந்திராவில் இருந்து சாராயம் வாங்கி வந்து மெரினா மணற்பரப்பில் கண்ணகி சிலை பின்புறம் மணலில் புதைத்து வைத்து விற்பனை செய்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விஷால் வினோத் பவார் என்பவரை மெரினா போலீசார் நேற்று இரவில் கைது செய்துள்ளனர். நேற்றைய தினம் மணற்பரப்பில் 2 பாட்டில்கள் சாராயம் எடுத்து கொண்டு சென்றபோது போலீசாரிடம் அவர் சிக்கி கொண்டார். மேலும் சாராய பாட்டில்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்தாக காவல் துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் உதவியுடன் ஜேசிபி இயந்திரங்களை வைத்து நேற்று இரவு மெரினா மணற்பரப்பில் போலீசார் தோண்டினர்.
இதையும் படிங்க... உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைக்கல் லிங்கம் பறிமுதல் - ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அதிகாரிகள்
அப்போது மண்ணில் மறைத்து வைத்திருந்த எட்டு 2 லிட்டர் பாட்டில்கள் சாராயத்தை தோண்டி எடுக்கப்பட்டது. தண்ணீர் பாட்டில்களில் அடைத்து வைத்திருந்த சாராயங்களை பறிமுதல் செய்து பக்கெட்கள் மூலம் போலீசார் எடுத்து சென்றனர். கைதான விஷால் வினோத் பவாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயத்தை ரயில் மூலமாக வாங்கி வந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இவர்களுக்கு சாராயத்தை சப்ளை செய்த ஆந்திர நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments