ஈரோட்டில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாக தெலங்கானாவைச் சேர்ந்த 3 தம்பதியினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
ஈரோடு மூலப்பாளையம் விநாயகர் கோயில் வீதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பூட்டியிருந்த மூன்று வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்தது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் மீண்டும் இரண்டு வீடுகளில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது.
இதையடுத்து நகர துணை காவல் கண்காணிப்பாளர் அனந்தகுமார் தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சூர்யா - பாரதி, மணி - மீனா மற்றும் விஜய் - லட்சுமி ஆகிய மூன்று தம்பதியினரை கைது செய்து 35 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற போலீசாரின் விசாரணையில் இவர்கள் மீது தெலுங்கானாவில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது தெரியவந்தது. மேலும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகளாகவும் இருப்பது தெரியவந்தது.
இவர்கள் சென்னையில் தங்கி தமிழகத்தின் பல மாவட்டங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்துள்ளனர். இதேபோல் ஈரோட்டில் கொள்ளையடித்து விட்டு தப்பிசெல்லும் போது ஈரோடு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தேடப்படும் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து சிறையில் அடைத்திருப்பது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments