யாசகம் கேட்ட 6 வயது சிறுவனை போலீஸ்காரர் ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் தலைமைக் காவலராக பணியாற்றுபவர் ரவி சர்மா. இவர் இரு தினங்களுக்கு முன்பு, பணி நிமித்தமாக தாட்டியா மாவட்டத்துக்கு சென்றுள்ளார். அப்போது சாலையோரம் பேருந்துக்காக அவர் காத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த 6 வயது நிரம்பிய சிறுவன் ஒருவன், தனக்கு மிகவும் பசியாக இருப்பதாகவும், ஏதேனும் பணம் இருந்தால் தந்து உதவுமாறும் கேட்டுள்ளான்.
அதற்கு ரவி சர்மா, தன்னிடம் பணம் ஏதும் இல்லை எனக் கூறியுள்ளார். ஆனால் அந்த சிறுவன் அவரிடம் தொடர்ந்து பணம் கேட்டுள்ளான். இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ரவி சர்மா, அந்த சிறுவனை சரமாரியாக தாக்கினார். பின்னர் அந்த சிறுவனின் கழுத்தை நெரித்தார். இதில் சிறிது நேரத்திலேயே மூச்சுத் திணறி அந்த சிறுவன் உயிரிழந்தான். அதன் பிறகு சிறுவனின் உடலை அருகில் இருந்த புதருக்குள் வீசிவிட்டு ரவி சர்மா சென்றுவிட்டார். அந்த இடத்தில் யாரும் இல்லாததால் இந்த சம்பவம் உடனடியாக யாருக்கும் தெரியவரவில்லை.
இந்நிலையில், நேற்று காலை சிறுவனின் உடலை அக்கம்பக்கத்தினர் பார்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு வந்த போலீஸார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிறகு, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த போது சிறுவனை தலைமைக் காவலர் ரவி சர்மா கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரவி சர்மாவை போலீஸார் இன்று கைது செய்தனர்.
தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அந்த சமயத்தில் சிறுவன் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் அவனை கொலை செய்ததாகவும் ரவி சர்மா வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனிடையே, தலைமைக் காவலர் ரவி சர்மாவை பணி நீக்கம் செய்யுமாறு தாட்டியா மாவட்ட டிஎஸ்பி, மத்திய பிரதேச காவல்துறை தலைமையகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments