பிரபல திரைப்பட இயக்குனர் சங்கர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். சொந்த காரில் வந்த சங்கர் 3 மணி நேர விசாரணைக்கு பிறகு ஊடகத்தின் கண் படாமல் பின் வழியாக வாடகை காரில் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சிவாஜி, எந்திரன் உட்பட பல தமிழ் திரைப்படங்களை இயக்கியவர் சங்கர். இவர் இன்று தனது வழக்கறிஞருடன் சென்னை ஆயிரம் விளக்கில் அமைந்துள்ள அமலாக்கத்துறை சென்னை மண்டல அலுவலகத்தில் விசாரணை ஒன்றிற்காக ஆஜரானார். அமலாக்கத்துறை துணை இயக்குனர் மல்லிகா அர்ஜுனா முன் இயக்குனர் சங்கர் ஆஜரானார்.
அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். சட்டவிரோத பணபரிமாற்ற குற்றச்சாட்டின் ஒன்றின் அடிப்படையில் திரைப்பட இயக்குனர் சங்கரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அது என்ன வழக்கு என்பதனை அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. விசாரணைக்கு பிறகு தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.
இயக்குனர் சங்கர் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணைக்காக இயக்குனர் சங்கர் ஆஜராகி உள்ள தகவல் அறிந்து ஊடகத்தினர் ஒளிப்பதிவாளர்கள் அதிகளவில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் குழுமி இருந்தனர். விசாரணைக்காக சங்கர் தனது இன்னோவா காரில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
விசாரணை முடிந்த பிறகு ஊடகத்தினருக்கு கண்ணில் படாமல் அமலாக்கத்துறை அலுவலகத்தின் பின்வழியாக சென்று வாடகை காரில் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் வழக்கு தொடர்பாக இயக்குனர் சங்கரை அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments