
ரூ.24 லட்சம் மோசடி செய்த வழக்கில் போலி பெண் எஸ்ஐ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த கணவரும் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் சுங்கவார்சத்திரத்தை சேர்ந்தவர் ரோகிணி (32). கடந்தாண்டு இவருக்கு, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு இந்திரா நகரைச் சேர்ந்த வியாபாரி தினேஷ்குமார் அறிமுகமாகியுள்ளார். அப்போது ரோகிணி, தான் சென்னையில் போலீஸ் எஸ்ஐ ஆக பணிபுரிந்து வந்ததாகவும், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளேன்.

தற்போது போலீசாரால் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை விற்பனை செய்து வருகிறேன். எனவே வாகனங்கள் ஏதாவது தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். பிற இடங்களை விட குறைந்த விலையில் வாகனங்கள் தருகிறேன் என்று தினேஷ்குமாரிடம் கூறியுள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய அவர், முதற்கட்டமாக 2 கார்கள் வேண்டும் என ரூ.2 லட்சத்தை ரோகிணியிடமும், ரூ.12 லட்சத்தை அவருடைய கணவர் சந்துருவின் வங்கிக் கணக்கிலும் செலுத்தியுள்ளார். சில நாட்களுக்கு பின்னர் நண்பர்களுக்கு 2 கார் தேவை என்று மேலும் ரூ.10 லட்சத்தை சந்துருவின் வங்கிக் கணக்கில் தினேஷ்குமார் செலுத்தியுள்ளார்.
இந்நிலையில், சில வாரங்கள் ஆகியும் ரோகிணி கூறியபடி கார்களை கொடுக்காமலும், உரிய பதில் தெரிவிக்காமலும் காலம் கடத்தி வந்ததால் அவர் மோசடி செய்தை அறிந்து, வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் தினேஷ்குமார் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில், ரோகிணி எஸ்ஐ என்று போலியாக நடித்து வாகனங்கள் வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதும், அதற்கு அவருடைய கணவர் சந்துரு உடந்தையாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ரோகிணியை கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்து வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த அவருடைய கணவர் சந்துருவை (45) வேலூர் மாவட்ட காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் ஸ்ரீபெரும்புத்தூர் அருகே உள்ள புதுப்பட்டியில் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து வேலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பூபதிராஜன் தலைமையிலான போலீசார் சந்துருவை நேற்று கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments