
ஊழல், பாலியல் தொல்லை, முதலை கண்ணீர், கழுதை உள்ளிட்ட ஏராளமான வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாது என நாடாளுமன்ற செயலகம் வெளியிட்டுள்ள கையேடு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியின் விளக்கம் மற்றும் எதிர்கட்சியின் விமர்சனம் உள்ளிட்டவற்றை குறித்து விரிவாக காணலாம்..
ஊழல், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கோழை, அவமானம், கிரிமினல், முதலைக்கண்ணீர், முட்டாள்தனம், சர்வாதிகாரி, சகுனி, சர்வாதிகாரம், அராஜகவாதி, கண்துடைப்பு, ஒட்டுக்கேட்பு, துரோகம் செய்தார், திறமையற்றவர், அழிவு சக்தி, இரட்டை வேடம், பயனற்றது, குழந்தைத்தனம், கிரிமினல், பொய் ,கொரோனா வழங்குபவர், போலித்தனம், ரவுடித்தனம், தவறாக வழி நடத்துதல், முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப்க் கழுதை, உண்மையல்ல, ரத்தக்களறி, காட்டிக் கொடுப்பது போன்ற வார்த்தைகள் நாடாளுமன்றத்தில் பயன்படுத்த உகந்த வார்த்தைகள் அல்ல எனக்கூறி நாடாளுமன்ற செயலகம் கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இத்தகைய வார்த்தைகளை நாடாளுமன்றத்தின் மக்களவை மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் பயன்படுத்தினால் அந்த வார்த்தைகள் அவரின் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு விடும். இந்த விவகாரம்தான் தற்பொழுது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் என எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

பிரதமர் எப்படியெல்லாம் அரசாங்கத்தை கையாள்கிறார் என்பதற்கான அகராதி சொற்கள் தற்பொழுது தடை செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மேற்சொன்ன அத்தனை வார்த்தைகளையும் நான் நிச்சயமாக பயன்படுத்துவேன். முடிந்தால் என்னை நாடாளுமன்றத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யுங்கள். ஜனநாயகத்திற்காக தொடர்ந்து பணிபுரிவேன் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் சவால் விடுத்துள்ளார்
மற்றொரு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மஹுவா மொய்த்ரா, பாஜக எவ்வாறெல்லாம் இந்தியாவை அழித்து வருகிறது என்பது குறித்து பேசும் பொழுது எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தையும் அரசு தடை செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளின் பட்டியலில் சங்கி என்ற வார்த்தை மட்டும்தான் இல்லை என கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த விமர்சனங்கள் குறித்து பதிலளித்துள்ள மத்திய அரசு தரப்பு, தேவையில்லாத சர்ச்சையை எதிர்க்கட்சிகள் கிளப்புவதாகவும், தற்பொழுது எதிர்க்கட்சிகள் ஆக இருப்பவர்கள் ஆளுங்கட்சியாக இருந்த போதும் இப்படியான வார்த்தைகளுக்கான தடை என்பது விதிக்கப்பட்டு தான் வந்தது என்றும் மேலும் இந்த தடை செய்யப்பட்ட வார்த்தைகளுக்கான பட்டியல் என்பது புதிய பரிந்துரைகள் அல்ல என்றும் ஏற்கனவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மற்றும் பல மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் நீக்கப்பட்ட வார்த்தைகளின் தொகுப்பு என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
வரும் 18ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் இந்த வார்த்தை கட்டுப்பாடு விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் பிரச்சினையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது
இதையும் படிக்கலாம்: புதிய தலைமை பொருளாதார ஜோதிடரை நிர்மலா நியமிக்க வேண்டும் - ப.சிதம்பரம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/l8hAwYH
via IFTTT

0 Comments