அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் தொடந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் காரசாரமாக நடைபெற்றது.
உள்நோக்கம் கொண்ட முடிவை எடுத்துள்ளனர் - வைரமுத்து:
வைரமுத்து தனது தரப்பு வாதத்தில், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி எந்த கூட்டமும் கூட்டக் கூடாது என்பதே என் கோரிக்கை. பொதுக்குழு குறித்த நிகழ்ச்சி நிரல் வெளியிடுவதில்லை என்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை இரு நீதிபதிகள் அமர்வு ஏற்கெனவே நிராகரித்துள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒன்றரை கோடி தொண்டர்கள் எடுத்த முடிவை 2660 பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டும் சேர்ந்து செல்லாதது ஆக்கி விட முடியுமா? இவர்கள் இணைந்து மாற்ற நினைப்பது உள்நோக்கம் கொண்டதாகவே கருத வேண்டும். இருவருக்கும் 5 ஆண்டுகள் பதவிக்காலம் வகுக்கப்பட்டு உள்ளது.” என்று தெரிவித்தார்.
பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் - ஈபிஎஸ் தரப்பு:
ஈபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயணன், “கட்சி விதிப்படி பொதுக்குழுவிற்குத்தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் கோரினால் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் பொதுக்குழுவை 30 நாட்களுக்குள் கூட்ட வேண்டும். அப்போது 15 நாட்கள் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்பது தேவையில்லை.” என்று வாதிட்டார்.
மீண்டும் பொதுச்செயலாளர் பதவி ஏன்? - நீதிபதி கேள்வி:
இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், “பெரியாரை மட்டுமே தலைவராக ஏற்றுக் கொள்வதாக கூறித்தானே பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என்று கூறிய நிலையில், அந்த பதவியை கலைத்துவிட்டு, ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. ஆனால் மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்குவது ஏன் என்பதை விளக்க வேண்டும். பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா எனவும் விளக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
தேர்வு நடைமுறைகளில் மாற்றம் செய்யவில்லை - ஈபிஎஸ் தரப்பு:
அடுத்து பேசிய ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயணன், “பொதுச் செயலாளர் பதவியை கலைத்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டபோதும் தேர்வு நடைமுறைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாலர் இல்லாவிட்டால் பொருளாளர், தலைமைக் கழக செயலாளர் கட்சியை நிர்வகிக்க விதிகள் வகை செய்கிறது. அதனால் பொதுக்குழுவுக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் அழைப்பு விடுத்ததில் தவறில்லை.
2016ல் தற்காலிக பொதுச் செயலாளராக இருந்த சசிகலா சிறையில் அடைக்கப்பட்டபோது, அவர் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 12ல் பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் பின்னரே கட்சி விதிகளில் திருத்தம் செய்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2021 டிசம்பர் மாதம் நடைபெற்ற செயற்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.
இரு பதவிகளுக்கும் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு வேட்புமனுக்கள் வரவேற்கப்பட்டபோது, தலா ஒரு வேட்புமனு தான் தாக்கல் செய்யப்பட்டது. ஜூலை 23 பொதுக் குழுவிற்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டிலும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவில்லை. தீர்மானங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டது” என்று வாதிட்டார்.
பொதுக்குழு உறுப்பினர் தேர்தலும் செல்லாததாகி விடுமா? - நீதிபதி கேள்வி
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், “பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாததால் இரு பதவிகள் தேர்தல் செல்லாது என்றால், பொதுக்குழு உறுப்பினர்களின் தேர்தலும் செல்லாததாகி விடுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு விளக்கமளித்த ஈபிஎஸ் தரப்பினர், “ஜூலை 23 பொதுக்குழு கூட்டத்தில் 2200 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில், திட்டமிட்டிருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. இதனால் இரட்டை தலைமைக்கான திருத்தப்பட்ட விதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. 2200 பேரில் 2190 உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று அடுத்த பொதுக்குழு ஜூலை 11 என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தற்காலிக அவைத்தலைவராக கையெழுத்திட்ட தமிழ்மகன் உசேன், நிரந்தர அவைத்தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர், ஜூலை 11 பொதுக்குழு அறிவிப்பை வெளியிட்டார்” என்று தெரிவித்தார்.
தமிழ்மகன் உசேன் கட்சி விதிப்படி நியமிக்கப்பட்டாரா? - நீதிபதி கேள்வி:
அப்போது மீண்டும் குறுக்கிட்ட நீதிபதி, “நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் கட்சி விதிப்படி நியமிக்கப்பட்டாரா?” என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து இருவரால் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட தமிழ்மகன் உசேனைத்தான் நிரந்தர அவைத் தலைவராக தேர்வு செய்தோம் என்று ஈபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
உசேன் அவைத்தலைவரானபோது நான் வெளிநடப்பு செய்துவிட்டேன் - ஓபிஎஸ்:
அப்போது குறுக்கிட்டு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் தரப்பினர், “தமிழ்மகன் உசேனை நிரந்தர் அவைத்தலைவராக நியமிக்க முன்மொழியப்பட்ட போது ஓபிஎஸ் பொதுக்குழுவில் இல்லை. அவைத்தலைவர் அறிவிப்புக்கு முன் அவர் வெளிநடப்பு செய்து விட்டார். அவர் தமிழ் மகன் உசேனை முன்மொழியவோ, வழிமொழியவோ இல்லை” என்று தெரிவித்தனர்.
பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதலுடனே உசேன் அவைத்தலைவர் ஆனார் - ஈபிஎஸ்:
இதற்கு விளக்கமளித்த ஈபிஎஸ் தரப்பினர், “தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத்தலைவராக ஜூன் 23 பொதுக்குழுவில் கலந்து கொண்ட அனைவரும் ஏற்றுக் கொண்டனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்ளை கலைத்து இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்ய ஜூலை 11ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தேர்தல் அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார். நான்கு மாதங்களில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது. பெரும்பான்மையினரின் விருப்பம் ஒற்றை தலைமை தான். நான்கு மாதங்களில் பொதுச் செயலாளர் தேர்தல் என அறிவிக்கப்பட்டதால் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.” என்று தெரிவித்தனர்.
நாளைக்கு விசாரணை ஒத்திவைப்பு:
இருதரப்பினர் வாதங்களும் இன்று நிறைவடைந்த நிலையில், அடுத்தக் கட்ட விசாரணையை நாளை காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன். கட்சி பொதுக்குழுவை கூட்டியதில் விதிகள் பின்பற்றப்படவில்லை எனில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி விசாரணையின்போது தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/bZj18C5
via IFTTT
0 Comments