தென்காசி, மதுரை வழியாக இயக்கப்பட்ட திருநெல்வேலி - தாம்பரம், திருநெல்வேலி -மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்கள் மூலம் இரண்டரை மாதங்களில் 2 கோடி ரூபாய் வருமானத்தை குவித்துள்ளதால், அவற்றை தொடர்ந்து இயக்க கோரிக்கை வைத்துள்ளனர் அம்மாவட்ட பயணிகள்.
திருநெல்வேலியில் காலியாக நிறுத்தி வைக்கப்படும் ரயில் பெட்டிகளை கொண்டு திருநெல்வேலி - தாம்பரம் மற்றும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் கடந்த ஏப்ரல் 17 முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு சிறப்பு ரயில்கள் மூலமாக தெற்கு ரயில்வேக்கு 2 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்துள்ளது.
கோடைக்காலத்தில் வாராந்திர சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்ட இந்த இரு ரயில்களுக்கு துவக்கத்திலேயே பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த சிறப்பு ரயில்களுக்கான வருமானம் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை குறித்து சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு தென்னக ரயில்வே அளித்த பதிலில், “திருநெல்வேலி - தாம்பரம் ரயில் 9313 பயணிகளுடன் 65.77 லட்சம் வருமானமும், தாம்பரம் - திருநெல்வேலி ரயில் 8940 பயணிகளுடன் 55.14 லட்சம் வருமானமும், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் ரயில் 7814 பயணிகளுடன் 38 லட்சம் வருமானமும், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ரயில் 8380 பயணிகளுடன் 42.14 லட்சம் வருமானமும் தந்துள்ளது. இரண்டரை மாதங்களில் இரு மார்க்கங்களிலும் 10 சேவைகள் இயக்கப்பட்ட இந்த இரு வாராந்திர சிறப்பு ரயில்களையும் சேர்த்து மொத்தம் 34,447 பயணிகளுடன் 2.01 கோடி வருமானம் கிடைத்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளது.
வருவாயை வாரிக்குவித்த இந்த இரு ரயில்களையும், குற்றால சீசன் களை கட்டும் இவ்வேளையில் தொடர்ச்சியாக இயக்கவும், அவற்றை விரைவில் நிரந்தர எக்ஸ்பிரஸ் ரயில்களாக தரம் உயர்த்தவும் தென்மாவட்ட பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/XKNAJWQ
via IFTTT
0 Comments