கோகோகோலா சாம்பியன்ஸ் டிராபி முத்தரப்புத் தொடரில் ஜிம்பாப்வே பவுலர் ஹென்றி ஒலோங்கோவின் பந்துவீச்சில் சச்சின் டெண்டுல்கர் தனது விக்கெட்டை இழந்த பின் நடந்த சுவராஸ்யமான விஷயம் குறித்துப் பேசியுள்ளார் அஜய் ஜடேஜா.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இந்தியா ஒவ்வொரு ஆண்டும் ஜிம்பாப்வேயுடன் விளையாடுவதில்லை என்றாலும், இரு அணிகளுக்கும் இடையேயான போட்டிகள் மிகவும் வழக்கமானதாக இருந்த காலம் என்றால் அது 1990களில் தான். அதில் மறக்கமுடியாத தொடர்களில் ஒன்று இந்தியா, ஜிம்பாப்வே, இலங்கை அணிகள் மோதிய கோகோகோலா சாம்பியன்ஸ் டிராபி முத்தரப்புத் தொடர்.
அந்த நேரத்தில், ஜிம்பாப்வே அணியில் ஆண்டி ஃப்ளவர், கிராண்ட், ஹீத் ஸ்ட்ரீக், கேப்டன் அலிஸ்டர் கேம்ப்பெல், பொம்மி எம்பாங்வா ஆகியோர் நட்சத்திர வீரர்களாக ஜொலித்தனர். அந்த தொடரில்தான் இளம் வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஹென்றி ஒலோங்கோ, இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை வீழ்த்தி பிரபலமானார். அதோடு சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் அஜய் ஜடேஜா ஆகியோரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற காரணகர்த்தாவாக இருந்தார் ஒலோங்கோ.
இந்நிலையில் அந்த போட்டி குறித்து தற்போது நினைவுகூர்ந்த அஜய் ஜடேஜா, ''ஹென்றி ஒலோங்கோ வீசிய ஷார்ட் பிட்ச் பந்தில் அவுட் ஆகியிருந்தார் சச்சின். அந்த பந்து உண்மையில் சச்சினை மிகவும் பாதித்தது. அடுத்த இரண்டு நாட்கள் அவர் தூங்கவில்லை. இரவு முழுவதும் வருத்தத்துடன் காணப்பட்டார். நாங்கள் ஒருபோதும் அவரை அப்படி பார்த்ததில்லை'' என்றார்.
எனினும் அந்த தொடரின் இறுதிப்போட்டியில் ஜிம்பாப்வேவை எதிர்கொண்ட இந்திய அணி, சச்சினின் அசத்தலான சதத்தின் துணையுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஜிம்பாப்வேக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேன்களில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் (370 ரன்கள்) உள்ளார். அதேபோல் ஜிம்பாப்வேக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்திய பேட்ஸ்மேனாக சச்சின் டெண்டுல்கர் (127* ரன்கள்) உள்ளார்.
இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் கடைசியாக 2016 ஆம் ஆண்டு மோதின. அதன்பின் இப்போதுதான் இவ்விரு அணிகளும் சந்திக்கின்றன. ஜிம்பாப்வே தொடர் என்றாலே பெயருக்கு ஆடப்படும் ஒரு தொடராகவே இருந்து வருகிறது. அதுவும் பிசிசிஐ எப்போதும் 2-ம் தர அணியையே தேர்ந்தெடுத்து அனுப்புகிறது. ஆனால் 2000க்கு முன்பாக இந்தியா - ஜிம்பாப்வே தொடர் என்றாலே அனல்பறக்கும். அப்படியிருந்த ஜிம்பாப்வே அணி இப்போது கத்துக்குட்டி அணியாக மாறியுள்ளது. இதனால் எதிரணிகளின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு 2வது தர இளம் அணி அங்கு விளையாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இதையும் படிக்க: வேண்டுமென்றே அவர் தலையில் வீசினேன்'-சச்சின் குறித்து அக்தர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/439hOqP
via IFTTT
0 Comments