சொத்தை விற்பனை செய்வதாகவும் மற்றும் பொது அதிகார ஆவணம் வழங்குவதாகக் கூறி 11 லட்ச ரூபாய் மோசடி செய்து, தலைமறைவான பிரிட்டனை சேர்ந்தவரின் ஜாமின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டு குடிமகனான ரான்சம் அன்செலம் முர்ரே என்பவர் சென்னையை சேர்ந்த பிரேம் சந்த் ஜெயின் என்பவருக்கு ஒரு நிலத்தை விற்பனை செய்வதாகவும், தவறினால் பொது அதிகாரம் வழங்குவதாகவும் கூறி 25 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளார். இந்த புகாரில் 2016ல் பரங்கிமலை காவல் நிலையத்தில் பதிவான வழக்கு, பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அப்போது தலைமறைவான ரான்சம் முர்ரே தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், லண்டனில் இருந்து ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்தியா வந்த ரான்சம் முர்ரே பெங்களூரு விமான நிலையம் வந்த போது கைது செய்யப்பட்டு, சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில் ஏற்கனவே பதிவான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமின் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, பல்லாவரத்தில் உள்ள ஜெனெட் மேயர்ஸ் என்பவரின் சொத்து விற்பனைக்கான பொது அதிகார ஆவணம் வழங்குவதாகக் கூறி 11 லட்சத்து 7 ஆயிரத்து 30 ரூபாய் வரை பணம் பெற்று, மோசடி செய்துள்ளதாகவும், பணப் பரிமாற்றம் தொகையை பறிமுதல் செய்ய வேண்டியுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments