பூந்தமல்லியில் பாதுகாப்பு கருதி மூடப்பட்ட டாஸ்மாக் பார் தொடர்ந்து செயல்பட்டு வருவதும் மற்றும் சட்ட விரோதமாகவும் மது விற்பனை செய்து வருவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பூவிருந்தவல்லியிலிருந்து போரூர் வரை செல்லும் ட்ரங்க் சாலையில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் மெட்ரோ ரயில் பணி காரணமாக ட்ரங்க் சாலை கூறுகளாக காணப்படுகிறது. குறிப்பாக கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளன. அருகே உள்ள பழைய கட்டிடங்கள் பாதிப்பு ஏற்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ட்ரங்க் சாலையில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார்கள் சாலை போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டன. ஆனால் கடந்த 5ஆம் தேதி மூடப்பட்ட டாஸ்மாக் பார் மூடப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும் பாரில் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மதுபானங்கள் இரண்டு மடங்கு விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் குறுகலான சாலையில் தொடர்ந்து டாஸ்மாக் பார் செயல்பட்டு வருவதால் சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்வதை யாரும் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் உடனடியாக சம்பந்தப்பட்ட டாஸ்மாக் பாரை மூட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments