’குற்றவாளிகள் தப்பிக்கமுடியாது’ -குடிநீரில் மலம் கலப்பு விவகாரத்தில் நீதிமன்றம் எச்சரிக்கை

LATEST NEWS

500/recent/ticker-posts

’குற்றவாளிகள் தப்பிக்கமுடியாது’ -குடிநீரில் மலம் கலப்பு விவகாரத்தில் நீதிமன்றம் எச்சரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர், வேங்கைவயலில் மலம் கலந்த கழிவுநீர், குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது ஒரு முக்கிய பிரச்னை என்றும், குற்றவாளிகள் கண்டிப்பாக தப்பிக்க முடியாது என்றும் தெரிவித்த மதுரைக்கிளை நீதிபதிகள், வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பினர்.

புதுக்கோட்டை மாவட்டம் இடையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக்கோரிய வழக்கில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் புதுக்கோட்டை மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி பிரிவு துணை ஆணையர் ஆகியோர் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

image

புதுக்கோட்டை, கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "புதுக்கோட்டை வேங்கைவயலில் அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த கழிவுநீர் கலக்கப்பட்டது. இந்த தண்ணீரை குடித்ததால் பல குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது அப்பகுதியில் இரட்டைக்குவளை முறை வழக்கத்தில் இருந்ததும், அப்பகுதியிலுள்ள கோவிலில் பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படாததும் தெரியவந்தது.

image

புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை பல கிராமங்களிலும் இதுபோன்ற தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே, புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் வெவ்வேறு வடிவங்களில் நடந்துவரும் தீண்டாமைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து, அவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், புதுக்கோட்டை வேங்கைவயலில் மலம் கலந்த கழிவுநீரை குடிநீரில் கலந்தவர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, மலம் உள்ளிட்ட கழிவுநீர் கலந்தநீரை குடித்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இன்று காலை இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டது. மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

image

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினார்.

அரசு தரப்பில், இரட்டைக்குவளை முறை மற்றும் பட்டியல் இனத்தவர்களை கோவில் உள்ளே அனுமதிக்காதது மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் உள்ளிட்ட கழிவுநீரை கலந்தது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இரட்டைக்குவளை முறை, கோவில் அனுமதிக்காதது தொடர்பாக 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலத்துடன் கழிவுநீர் கலந்தது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர் என்றும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலத்துடன் கழிவுநீர் கலந்தது தொடர்பான விவகாரத்தில் நபர்களின் பட்டியல் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.

image

இதனையடுத்து பேசிய நீதிபதிகள், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் கண்டிப்பாக தப்பிக்க முடியாது. இது மிக முக்கிய பிரச்னை. எனவே, வழக்கு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் புதுக்கோட்டை மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி பிரிவு துணை ஆணையர் ஆகியோர் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments