கபில்தேவை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்... உலக கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்த்திய தரமான சம்பவம்!

LATEST NEWS

500/recent/ticker-posts

கபில்தேவை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்... உலக கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்த்திய தரமான சம்பவம்!

டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து அடுத்தடுத்து பல சாதனைகளை குவித்துவரும் அஸ்வின், வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உலக கிரிக்கெட் அரங்கில் ஒரு தரமான சம்பவத்தை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆல்ரவுண்டர்கள் என்றால் பிளிண்டாஃப், ஜாக் காலிஸ், இயான் போதம், காரி சோபர்ஸ், இம்ரான் கான், ஷான் பொல்லாக் என மற்ற நாட்டு வீரர்களின் பெயர் தான் காலத்திற்குமான பட்டியலில் முதலில் வந்து நிற்கும். இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டர் யார் என்று தேடினால், ஒரே ஒரு இந்தியவீரர் வந்து நிற்பார். பவுலிங் மற்றும் பேட்டிங் என கலக்கிய அவரது பெயர் கபில்தேவ். அவருக்கு பிறகு யாரையும் இந்திய அணி இப்போதுவரை ஆல்ரவுண்டராக டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் கண்டதே இல்லை. அதை மெய்யாக்கி தந்ததும், தந்துகொண்டிருப்பதும் தமிழகத்தை சேர்ந்த வீரரான அஸ்வின் தான்.

image

ஆனால் கபில்தேவ் கூட செய்யாத ஒரு சாதனையை அவரை பின்னுக்கு தள்ளி முதல் இந்தியவீரராக செய்து காட்டி சாதனை படைத்துள்ளார் அஸ்வின். டெஸ்ட் கிரிக்கெட்டில் 88 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் அஸ்வின், 400 விக்கெட்டுகளை கைப்பற்றி 3,000 ரன்களையும் குவித்து, இதை சாதித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 86 போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருக்கும் நியூசிலாந்து முன்னாள் வீரர் ரிச்சர்ட் ஹாட்லீக்கு பிறகு இரண்டாவது வீரராக இந்த சாதனையை படைத்திருக்கிறார் அஸ்வின். இதே 400 விக்கெட்டுகள் மற்றும் 3000 ரன்கள் என்ற சாதனையை கபில்தேவ் 131 போட்டிகளில் செய்திருந்தார். அவரை பின்னுக்கு தள்ளி குறைவான போட்டிகளில் இதை நிகழ்த்தி காட்டியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 400 விக்கெட்டுகள் & 3,000 ரன்கள் என்ற சாதனையை படைத்த வீரர்கள் பட்டியல்,

1. ரிச்சர்ட் ஹாட்லீ:

நியூசிலாந்து அணியின் பவுலிங் ஆல்ரவுண்டரான ரிச்சர்ட் ஹாட்லீ, தனது டெஸ்ட் வாழ்க்கையில் 150 இன்னிங்ஸ்களில் 431 விக்கெட்டுகளை எடுத்துள்ளார், மேலும் 3124 டெஸ்ட் ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் வரலாற்றில் 400-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் மற்றும் 3000-க்கும் அதிகமான ரன்களை எடுத்த சாதனையை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை தக்கவைத்துள்ளார்.

image

2. கபில் தேவ்:

இந்தியாவின் ஹரியானா சூறாவளி என்று அழைக்கப்படும் கபில்தேவ், இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். கபில் தேவின் டெஸ்ட் வாழ்க்கை 16 ஆண்டுகள் நீடித்தது. இவ்வளவு நீண்ட வாழ்க்கையில் அவர் 227 இன்னிங்ஸ்களில் 434 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் மற்றும் 5248 ரன்கள் குவித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை கபில்தேவ் தக்கவைத்துக் கொண்டிருந்தார். தற்போது இவரை பின்னுக்கு தள்ளியிருக்கும் அஸ்வின் 449 விக்கெட்டுகளுடன் இருக்கிறார்.

image

3. ஷேன் வார்ன்:

எப்போதைக்குமான ஸ்பின் மன்னனாகக் கருதப்படும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வார்னே, டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான வாழ்க்கையைப் பெற்றவர். லெக் ஸ்பின்னரான இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 273 இன்னிங்ஸ்களில் 708 விக்கெட்டுகளை எடுத்து குவித்துள்ளார். மேலும் அவர் தனது அணிக்கு கீழ்-வரிசை பேட்ஸ்மேனாக மிகவும் பயனுள்ள வகையில் இருந்தார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3154 ரன்களை எடுத்துள்ளார். வார்னின் 3154 ரன்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட அடிக்காத வீரர்களில் அதிகபட்சமாக உள்ளது.

image

4. ஷான் பொல்லாக்:

தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்ட் வீரர் ஷான் பொல்லாக் 202 இன்னிங்ஸ்களில் 421 விக்கெட்டுகளையும், 3781 ரன்களையும் அடைந்துள்ளார். பொல்லாக் 1995-2008 வரை ஒரு உண்மையான ஆல்-ரவுண்டராக அவரது அணிக்கு பெரும் சொத்தாக விளங்கினார்.

image

5. ஸ்டூவர்ட் பிராட்:

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் தனது வாழ்க்கையில் இதுவரை 566 விக்கெட்டுகளை (293 இன்னிங்ஸ்களில்) வீழ்த்தியுள்ளார். லெஜண்ட் ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் இணைந்து ஆங்கிலேய பந்துவீச்சு தாக்குதலின் ஒரு தவிர்க்க முடியாத பகுதியாக பல ஆண்டுகளாக பிராட் இருந்துள்ளார்.

image

பிராட் தனது டெஸ்ட் வாழ்க்கையில் இதுவரை 3550 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டூவர்ட் பிராட் 2010 லார்ட்ஸ் டெஸ்டில் பாகிஸ்தானுக்கு எதிராக 9வது இடத்தில் பேட்டிங் செய்து 169 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து காலத்திற்குமான டெஸ்ட் ஆல்ரவுண்டரில் இருக்கும் ஒரே இந்திய வீரர் அஸ்வின்!

ஐசிசி தரவரிசைப்பட்டியலில் அனைத்து காலத்திற்குமான தரவரிசைப்பட்டியலில் அதிக புள்ளிகளை பெற்று முதல் 20 இருபது இடத்தில் இருக்கும் ஒரே இந்திய வீரராக இருந்துவருகிறார் அஸ்வின். இங்கிலாந்து வீரர் பென்ஸ்டோக்ஸ்க்கு பிறகு, அதிகபட்ச புள்ளிகளாக 2016ஆம் ஆண்டு பெற்ற 492 புள்ளிகளுடன், 12ஆவது இடத்தில் இருக்கிறார் அஸ்வின்.

image

இன்னும் பல சாதனைகளை அஸ்வின் செய்வார் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/lcdgpks
via IFTTT

Post a Comment

0 Comments