ஆஸ்திரேலியா அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நடைபெறவிருக்கும் பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை பொறுத்தவரை ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் போட்டி போட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பாய்ண்ட்ஸ் டேபிளில் முதல் இரண்டு இடங்களை பிடித்திருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பிப்ரவரி மாதம் மோதவிருக்கின்றனர். இவ்விரு அணிகளுக்கிடையே யார் சிறந்த டெஸ்ட் அணி என்ற போட்டியே நிலவிவருகிறது.
காலையில் ஆஸ்திரேலியா, மதியம் இந்தியா, மீண்டும் மாலை ஆஸ்திரேலியா!
டெஸ்ட் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இருக்கப்போகும் இரண்டு அணிகள் என கிட்டத்தட்ட எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அணிகளாக ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் இருக்கின்றன. பேட்டிங் பவுலிங் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இரு அணிகளும் உலக டெஸ்ட் தரவரிசை போட்டியில் பலமாக இருக்கின்றன.
இன்று காலை 8 மணியளவில் டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணியை, பின்னுக்கு தள்ளி இந்திய அணி மதியம் 1.30 மணியளவில் முதலிடத்தை பிடித்தது. இந்நிலையில் மீண்டும் ஆஸ்திரேலியா அணியே 4 மணியளவில் முதலிடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது.
இந்தியாவில் டெஸ்ட் போட்டியை வெற்றிபெற முக்கிய பங்கு வகிப்பது சுழற்பந்துவீச்சு!
சில மணிநேர இடைவெளியிலேயே முதல் இடத்திற்கான போட்டி பலமாக இருந்துவரும் நிலையில், எதிர்வரும் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான போட்டி தற்போதே எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளது.
வெஸ்ட் இண்டிஸ் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான உள்நாட்டு போட்டிகளில் சிறப்பான வேகப்பந்துவீச்சை வெளிப்படுத்தி தொடர் வெற்றியை பதிவு செய்திருந்தாலும், இந்தியாவில் டெஸ்ட் போட்டியின் வெற்றியை முடிவு செய்வதில் பெரும் பங்கு வகிப்பது என்பது சுழற்பந்துவீச்சு தான். அதை எதிர்கொள்ளவும், இந்திய அணிக்கு சவால் அளிக்கும் வகையில் 4 சுழற்பந்துவீச்சாளர்களையும் தயார் செய்துள்ளது ஆஸ்திரேலியா அணி.
அந்த வகையில் ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்வெப்சன் மற்றும் கிரீன்ஹார்ன் டோட் மர்பி ஆகியோருடன் அனுபவமிக்க நாதன் லியான் உட்பட நான்கு சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆஸ்திரேலியா தனது டெஸ்ட் அணியை தயார் செய்துள்ளது. அதுதவிர, பகுதி நேர ஸ்பின்னர்களாக ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரும் அணியில் இருக்கின்றனர். தொடர்ந்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் நாதன் லியான், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 61 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிகவிக்கெட்டுகளை கைப்பற்றிய முதல்வீரராக இருக்கிறார்.
இந்நிலையில் தான் 18 வருடங்களுக்கு முன்னர் இந்திய மண்ணில் தொடரை கைப்பற்றிய போது ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருந்த கில்கிறிஸ்ட், `இந்திய அணியை 18 வருடங்களுக்கு பிறகு வெல்ல இது சிறப்பான தருணம்’ என்று கூறியுள்ளார். மேலும் “உங்கள் பெருமையையெல்லாம் மூட்டைக்கட்டிகொள்ளுங்கள். அது இந்தியா! இங்கு நீங்கள் ஆக்ரோஷமாக செயல்பட வேண்டுமானால், முதலில் உங்களை தற்காத்துகொள்ள வேண்டும்” என்று கூறி, எப்படி செயல்பட வேண்டும் என்று பல அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
2004 சுற்றுப்பயணத்தில் கில்கிறிஸ்ட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2-1 என்ற கணக்கில் இந்தியாவை அதன் சொந்தமண்ணில் தோற்கடித்து தொடரை கைப்பற்றியது. அந்த அணியில் ஜாம்பவான் வேகப்பந்து பந்துவீச்சாளர்களான க்ளென் மெக்ராத், ஜேசன் கில்லெஸ்பி மற்றும் மைக்கேல் காஸ்ப்ரோவிச், மற்றும் ஒரேயொரு தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளரான ஷேன் வார்ன் இடம்பெற்றிருந்தனர். “அப்போது எங்களால் இந்தியாவை அதன் சொந்தமண்ணில் வீழ்த்த முடியும் என்று நம்பிக்கை வைத்திருந்தோம். அதே நம்பிக்கையை இந்த ஆஸ்திரேலியா அணியும் வைக்க வேண்டும். எல்லை மீறிச் செல்ல வேண்டாம். அதற்கு பதிலாக பொறுமையாக இருங்கள்” என்று கேட்டுக் கொண்டுள்ளார் கில்கிறிஸ்ட்.
ஆஸ்திரேலியா அணிக்கு பல அறிவுரைகளை வழங்கியுள்ள கில்கிறிஸ்ட், “முதல் பந்திலிருந்தே ஸ்டம்ப் லைனை தாக்குங்கள். உங்களுடைய தற்போதைய வெற்றிகளை எல்லாம் ஓரம் வைத்திவிடுங்கள். ஆக்ரோஷமாக செயல்படவேண்டும் என்றால், நீங்கள் உங்களை டிஃபண்டிங் முறையில் தற்காத்துகொள்ள வேண்டும். தேடிச்சென்று சுழற்பந்துவீச்சாளர்களை ஆடாதீர்கள். பவுண்டரிகளுக்கு அதிகமாக முயற்சிப்பதை கைவிடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
பீல்ட் செட்டிங்கை பொறுத்தவரையில், “ஒரு ஸ்லிப் மற்றும் மிட்விக்கெட் கேட்சிங் பாய்ண்ட்டோடு பந்துவீச வேண்டும். பவுண்டரிகளை கட் செய்ய லாங்க் பீல்டர்களை வைத்து, ஷார்ட் கவர் அல்லது ஷார்ட் மிட்விக்கெட்டில் கேட்சிங் பீல்டர்களையும் வட்டத்திற்குள் நிறுத்த வேண்டும்”என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தொடரை ஆஸ்திரேலியாவே வெல்லும் என நம்பிக்கை தெரிவித்திருக்கும் கில்கிறிஸ்ட், “பல அணிகள் இந்தியாவை எதிர்கொள்ள புதிய சுழற்பந்துவீச்சாளர்களை எடுத்துச்செல்வர். அது பலமுறை சிறப்பானதாக அமைந்ததில்லை. அதனால் நீங்கள் உங்களுடைய பிரைம் பவுலர்களையே எடுத்துச்செல்லுங்கள், மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் நாதன் லயன் என நான்கு பந்துவீச்சாளர்களை கைவசம் வைத்துகொள்ளவேண்டும். அதை நீங்கள் நம்புங்கள். அந்த நம்பிக்கையோடே செல்லுங்கள்”என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “2004ல் இந்தியாவை வீழ்த்திய அணிக்கும், தற்போதைய அணிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது, இவர்கள் அதை செய்து முடிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/EzMkrh1
via IFTTT
0 Comments