சொத்துக்காக மாமியாரை கொன்று பாலாற்றில் வீசிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், வாயலூர் அடுத்த வேப்பஞ்சேரி கிராமப்பகுதியில் உள்ள பாலாற்றில், கடந்த 12ஆம் தேதி பெண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கூவத்தூர் போலீஸார், பாலாற்றில் மிதந்த பெண் சடலத்தை கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது, அடையாளம் தெரியாத நிலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்திருப்பது தெரிந்தது.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில் மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் மற்றும் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இந்த பெண் கல்பாக்கம் அருகே நத்தமேடு கிராமத்தை சேர்ந்த சாந்தி (வயது 50) என்பது தெரியவந்தது. சம்பவம் நிகழ்ந்த அன்று திருக்கழுக்குன்றம் அருகே வல்லிபுரம் கிராமத்தில் உறவினரின் துக்க நிகழ்வில் கலந்துகொள்ள அவர் சென்றது தெரியவந்திருக்கிறது. அதன்பின் மருமகனுடன் உள்ள தனது பேரப்பிள்ளைகளை பார்க்க சாந்தி மரக்காணம் சென்றுள்ளார் என்பது தெரியவந்திருக்கிறது. சாந்தியின் மகள் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை வைத்து மருமகனை விசாரணை செய்ததில் மாமியாரின் பேரில் உள்ள சொத்துக்களை பேரப்பிள்ளைகளின் பெயரில் எழுதி வைக்க வலியுறுத்தியதாகவும் அதைக் கேட்காத மாமியாரை கழுத்தை நெரித்து கொன்றதாகவும் பின்னர் 17 வயது நிரம்பிய உறவினர் பையனுடன் இணைந்து டாட்டா சுமோ காரில் கொண்டு வந்து பாலாற்றில் வீசியதாகவும் அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மருமகன் ஆனந்தன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கூவத்தூர் போலீசார் ஆனந்தன் மற்றும் அவரது உறவினரான 17வயது சிறுவனை கைது செய்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுவனை சிறார் சிறையிலும் ஆனந்தனை திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சொத்துக்காக மாமியாரை கொன்று வீசிய செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments