11 வருடங்களில் 11 குழந்தைகள்... போராடி கருத்தடை ஆபரேஷன் செய்தவருக்கு கணவனால் நடந்த கொடுமை!

LATEST NEWS

500/recent/ticker-posts

11 வருடங்களில் 11 குழந்தைகள்... போராடி கருத்தடை ஆபரேஷன் செய்தவருக்கு கணவனால் நடந்த கொடுமை!

ஒடிசாவின் கியோஜ்ஹர் என்ற பகுதியில் 11 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணொருவர், கணவரின் விருப்பத்துக்கு (!) மாறாக குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்காக தன் கணவனால் வீட்டிலிருந்து புறந்தள்ளப்பட்டிருக்கிறார். கணவரின் இச்செயலால் ஜானகி என்ற அப்பெண், தனது சில குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி வசித்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி 11 வருடங்களாவதாக சொல்லப்படுகிறது. 11 வருடங்களில் 11 குழந்தைகளை ஜானகி பெற்றிருக்கிறார். ஆக, கடந்த 11 வருடங்களாக இவர் குழந்தையை சுமந்தபடியே இருந்திருக்கிறார். இதைக்கண்ட உள்ளூர் `ASHA’ (Association for Social and Health Advancement) பணியாளர்கள், அவரை குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொள்ள அறிவுரைத்துள்ளனர். உரிய ஆலோசனைக்கும் மருத்துவமர்கள் பரிந்துரைகளுக்கும் பின் தன் உடலென்ற உரிமையில் அப்பெண் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.

image

இதுபற்றி உள்ளூர் ஊடகங்களில் பேசியுள்ள ஜானகி, “என் 11 குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்துவிட்டது. ஒவ்வொரு வருடம் எனக்கு குழந்தை பிறப்பதால், அவர்கள் வளர வளர நான் இன்னொரு குழந்தைக்கு உடலளவில் தயாராகி வருகிறேன். மட்டுமன்றி, ஒவ்வொரு வருடமும் நான் கர்ப்பமாவது எனக்கே சங்கடமாக இருக்கிறது. எங்கள் கிராமத்தில் பல பெண்கள் இந்த ஆபரேஷனை செய்துள்ளார்கள். ஆனால் நான் செய்தபோது, என் கணவர் அதை புரிந்துகொள்ளாமல் என்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்” என தெரிவித்துள்ளார்.

இவரது கணவர் ரபி, தன் மனைவி குற்றச்செயல் புரிந்ததாக பேசியுள்ளார். தன்னுடைய சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு பேசியுள்ள ரபி, “எங்கள் சமூகத்தில், பெண்கள் இப்படி செய்தால், எங்கள் முன்னோர்களுக்கு தண்ணீர்கூட கிடைக்காதென்ற ஐதீகம் உள்ளது. அதனால் இந்த மாதிரி ஆபரேஷனுக்கு எதிராக நிற்கிறேன்” என புரிதலின்றி மிகக்கடுமையாக பேசியுள்ளார்.

image

இந்நிலையில் ஜானகிக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை குறித்து புரிதல் ஏர்படுத்திய `ASHA’ பணியாளர் பிஜய்லக்‌ஷ்மி பேசுகையில், ஜானகியின் இந்த தொடர் பிரசவ வேதனை அவரது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தி வந்ததை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். அவர் சொல்கையில், “தொடர்ந்து 11 பிரசவத்தை சந்தித்ததால், அப்பெண் உடலளவில் மிகவும் பலவீனமாக மாறிவிட்டார். இதற்கு மேல் அவரால் ஒரு பிரசவத்தை தாங்க முடியாது. மேலும் அவர் குடும்பத்தாலும் 10 குழந்தைகளை பராமரிக்க முடியாது.

அப்படிப்பட்ட அவருக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ததற்காக, எனக்கு கொலை மிரட்டல்கள்கூட வருகின்றன. ஜானகியின் கணவர் ரபி, எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்; ஜானகியின் உடல்நிலையை புரிந்துக்கொள்ளவே இல்லை அவர். நான் மட்டுமல்ல… இதுபற்றி அவரிடம் யார் பேசினாலும் அவர் அப்படித்தான் செய்கிறார்” என்றுள்ளார். மேற்கொண்டு ரபிக்கு கருத்தடை அறுவை சிகிச்சை பற்றிய புரிதலை ஏற்படுத்தி, அவரை மனைவியுடன் சேர்த்து வைக்க, சுகாதார அதிகாரிகள் முயன்று வருவதாக சொல்லப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments