இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி 3 நாட்களில் முடிவை எட்டிவிட்ட நிலையில், போட்டியை பற்றி சக விமான பயணி ஒருவர், தன்னிடம் பேசியது குறித்து தெரிவித்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரானது தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நடந்த முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி, 2-0 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது.
அதில் பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது, 3 நாட்கள் முடிவதற்குள்ளாகவே முடிவை எட்டியது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அடித்த 400 ரன்களுக்கு மேல் லீட் கொடுக்க முடியாமல், இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆல் அவுட்டான ஆஸ்திரேலிய அணி, இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியாவது கடைசி நாள் வரை செல்லும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியாவின் நட்சத்திர ஸ்பின்னர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரது சுழற்பந்துவீச்சையும் தாக்குப்பிடிக்க முடியாத ஆஸ்திரேலிய அணியினர், இரண்டாவது இன்னிங்ஸில் 113 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகினர். 114 ரன்களை துறத்திய இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியில் 42 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜடேஜா, ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடரின் டெஸ்ட் போட்டி குறித்து தன்னுடைய யு-ட்யூப் பக்கத்தில் வீடியோவில் பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், விமானத்தில் சக பயணி ஒருவர் தன்னிடம் “என்னப்பா 3 நாட்களிலேயே போட்டியை முடித்துவிட்டீர்கள்?” என வருத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
“தற்போதுள்ள வீரர்கள் ரன்கள் விரைவாகவே கிடைத்துவிட வேண்டும் என விளையாடுகிறார்கள்”- அஸ்வின்
விமானத்தில் பயணம் செய்தபோது, பக்கத்தில் அமர்ந்திருந்த அஸ்வினின் அப்பா வயதுமிக்க ஒருவர், “ என்னப்பா டெஸ்ட் போட்டியை 3 நாட்களிலேயே முடித்துவிட்டீர்கள்? தற்போதையை டெஸ்ட் கிரிக்கெட் குறித்தே எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்று தன்னுடைய அபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளாராம்.
அதற்கு பதிலளித்திருக்கும் அஸ்வின், “ ‘ஐயா, இரண்டு விஷயங்கள் சொல்லவிரும்புகிறென். ஒன்று கிரிக்கெட் வீரர்களின் மனநிலை. இப்போதெல்லாம், டெஸ்ட் போட்டிகளுக்கு தகுந்தவாறு இல்லாமல், வீரர்களின் மனநிலை வேறுமாதிரி மாறிவிட்டது. ஆம்... இப்போதெல்லாம் வீரர்கள், வேகமாக விளையாட விரும்புகிறார்கள். அவர்களுக்கு விரைவாக ரன்கள் வரவேண்டும் என விரும்புகிறார்கள். மற்றொன்று இது 3 நாட்களில் முடியக்கூடிய போட்டியே அல்ல. விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்கும் அளவு, அவ்வளவு மோசமாகவெல்லாம் களம் இல்லை. நிலைத்து நின்று ஆடியிருந்தாலே இரண்டாவது செஷ்ஷனில் ஈஸியாக ரன் எடுத்திருக்கலாம்’ என்று அவரிடம் சொன்னேன்” கூறியதாக வீடியோவில் பேசியுள்ளார். மேலும், “இதில் நீங்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும். முன்னர் இருந்த கிரிக்கெட்டர்களின் மனநிலையும், தற்போதுள்ள கிரிக்கெட்டர்களின் மனநிலையும் மாறிவிட்டது” என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு ஆட்டங்களும் 3 நாட்களில் முடிந்திருக்கக் கூடாது- அஸ்வின்
போட்டியின் உண்மை நிலை குறித்து பேசியிருந்த அஸ்வின், “உண்மையில் இரண்டு அணியினருமே சரியாக விளையாடவில்லை. அவர்கள் இரண்டாம் நாள் சென்ற வேகத்திற்கு, மறுநாள் பொறுமையாக விளையாடி 160+ ரன்கள் அடித்திருந்தாலே போதும், அவர்கள் போட்டியில் இருந்திருப்பார்கள். சரியான நேரத்தில் எங்களுக்கு சாதகமான சூழல் அமைந்தது. அதை இந்தியா பயன்படுத்திகொண்டது. மற்றபடி ஆஸ்திரேலியா நன்றாகவே விளையாடினார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும், “இரண்டு போட்டிகளும் 3 நாட்களில் முடியக்கூடிய போட்டிகளே இல்லை. ஏனென்றால் ஆடுகளமானது அப்படி விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்கும் அளவு, அவ்வளவு மோசமாகவெல்லாம் இல்லை. நிலைத்து நின்று ஆடியிருந்தாலே இரண்டாவது செஷ்ஷனில் ஈஸியாக ரன்களை எடுக்கும்படி தான் நிலைமை இருந்தது. டி20 போட்டிகளுக்கான ஆடுகளமாக இல்லையே தவிர, மற்றபடி ரன்களை எடுக்கும் ஆடுகளமாக தான் இருந்தது.
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இன்னும் ஆஸ்திரேலியா ஆட்டத்திற்குள் தான் இருக்கிறார்கள்” என்று தன் வீடியோவில் தெரிவித்துள்ளார் அஸ்வின்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/183a2nU
via IFTTT
0 Comments