சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாட்டில் நிறைய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, கட்சி விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாட்டில், அக்கட்சி சார்பில் மூத்த நிர்வாகிகள், அகில இந்திய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது, 2023-24ஆம் ஆண்டுகளில் நடைபெற இருக்கும் பிற மாநில சட்டசபை தேர்தல்களில் செயல்படுவது குறித்து தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கட்சி விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்த கூட்டத்தில் கட்சி விதிகளில் மொத்தம் 85 திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கட்சியின் விதிகளில் மாற்றம்
முக்கியமாக, கட்சியின் தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட மல்லிகார்ஜுன கார்கேவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களை தேர்வு செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அக்கூட்டத்தில் கட்சியின் அமைப்பு விதிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் உறுப்பினர்கள் போதைப் பொருட்களை உபயோகிக்கக்கூடாது எனவும், கட்சியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்களையும், கொள்கைகளையும் நேரடியாகவோ, மறைமுகவோ பொதுவெளியில் மோசமாக விமர்சிக்கக்கூடாது எனவும் விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 23இல் இருந்து 35 ஆக உயர்த்த சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் பிரதமர்கள், தேசிய தலைவர்களை நிரந்தர உறுப்பினராக நியமிக்கவும் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் செயற்குழுவில் நிரந்தர உறுப்பினர்களாக செயல்பட வழிவகுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் செயற்குழுவில் 50 சதவிகிதத்தை பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்க திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மல்லிகார்ஜுன கார்கே உரை
காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளவும், ஆவணங்களை டிஜிட்டல் முறையில் மட்டுமே பராமரிக்கவும் கட்சி சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதோடு வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை கட்சி மீட்டெடுக்கும் எனவும் காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது.
இம்மாநாட்டில் முதல் நாளின்போது (பிப்ரவரி 24) உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சட்டசபை தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறிப்பிட்டு பேசினார். இரண்டாவது நாளான நேற்று (பிப்ரவரி 25) பேசிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “காங்கிரஸ் கட்சிக்கும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் இது ஒரு சவாலான காலம். பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் கைப்பற்றி அவற்றை நாசமாக்கிவிட்டன.
”இன்னிங்ஸ் முடிந்ததில் மகிழ்ச்சி”-சோனியா காந்தி
பாஜகவை நாம் வீரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். மக்களைச் சென்று சந்திக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் செய்தியை மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். நாட்டு மக்கள் அனைவரின் கனவுகளையும் காங்கிரஸ் கட்சி நனவாக்கும். இந்திய ஒற்றுமை யாத்திரை கட்சிக்கு மிகப் பெரிய திருப்புமுனை. அத்துடன் எனது இன்னிங்ஸ் முடிவடைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
அதானி குறித்து ராகுல் உரை
நிறைவு நாளான இன்று (பிப்ரவரி 26) பேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “தற்போது நமக்கு ஒரேயொரு ஆண்டு மட்டுமே மீதமுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் பா.ஜ.கவினருக்கு எதிரான கருத்துகளை கொண்டுள்ள மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்” என தெரிவித்தார். இதில் பேசிய எம்.பி. ராகுல் காந்தி, “பாரத் ஜோடோ யாத்ரா தேசபக்தியின் உண்மையான உணர்வைத் தூண்டியது. இது நான் செய்யவில்லை, காங்கிரஸ்காரர்களால் செய்யப்பட்டது.
நாடாளுமன்றத்தில் அதானி குறித்து கேள்வி கேட்க முடியாத நிலை உள்ளது. மீறி கேட்டால், அவைக் குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறார்கள். அதானி குறித்த உண்மை வெளிவரும் வரை நாங்கள் கேள்விகள் கேட்போம். இந்த விவகாரத்தில் ஏன் விசாரணை இல்லை? இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். அதானியும் மோடியும் ஒன்றுதான். மேலும் நாட்டின் மொத்தப் பணமும் அதானியின் கைகளில் உள்ளது” எனத் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/guaTJfk
via IFTTT
0 Comments