வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஃபேஸ்புக்கில் போலியாக விளம்பரம் செய்து, 50க்கும் மேற்பட்டோரிடம் 91 லட்சம் வரை மோசடி செய்த ஆசாமியை மத்திய குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் மணியம் ஆதூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சைலேஷ் (31). இவர் முகநூலில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்து, ஆவடி பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தை அணுகினார்.
அந்த நிறுவனத்தில் ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த சையத் மின் ஹாஜீதீன் (40) உள்ளிட்ட சிலர், சைலேஷிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 3 லட்சத்தை கேட்டுள்ளனர். அதன்படி சைலேஷ் கடந்த ஆண்டு ரூபாய் 3 லட்சத்தை கொடுத்திருக்கிறார். ஆனால் சொன்னபடி வெளிநாட்டில் வேலை வாங்கி தராததால் சைலேஷ் நேரில் சென்று தான் கொடுத்த பணத்தை தரும்படி கேட்டுள்ளார்.
சைலேஷிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதால், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்ற பிரிவில் சைலேஷ் புகார் கொடுத்தார். ஆவடி போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் கீதா மோசடிகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். முதலில் மோசடி தொடர்பாக சையத் மின் ஹாஜீதீனை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
மேற்கொண்ட விசாரணையில், இவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு ஒரு போலியான நிறுவனத்தை நடத்தியதும், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரிடம் ரூபாய் 91 லட்சத்திற்கும் மேல் மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. கைதான சையத் மின் ஹாஜீதீனை போலீசார் பூந்தமல்லி கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments