'இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க..' ஐஐடி மாணவர் தற்கொலையில் கல்லூரி நிர்வாகம் அறிக்கை

LATEST NEWS

500/recent/ticker-posts

'இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க..' ஐஐடி மாணவர் தற்கொலையில் கல்லூரி நிர்வாகம் அறிக்கை

மகாராஷ்டிராவை சேர்ந்த மாணவர் சென்னை ஐஐடியில் தற்கொலை செய்த விவகாரத்தில் ஐஐடி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மற்றொருபக்கம், அங்கு மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை ஐஐடி-யில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீவன் சன்னி என்பவர் இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சி மாணவராகப் படித்துவந்தார். இவர், தன்னுடைய அறையிலிருந்து இன்று காலை வெளியில் வரவில்லை. அதனால், அவரின் அறைக் கதவை சக மாணவர்கள் நீண்ட நேரமாகத் தட்டியிருக்கிறார்கள். எந்தவித பதிலும் இல்லாததால், விடுதி நிர்வாகத்துக்கு மாணவர்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் மாணவன் ஸ்ரீவன் சன்னி தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார்.

அதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்துக்கு ஐஐடி நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை ஐஐடி நிர்வாகம் தரப்பில் மாணவர் தற்கொலை குறித்த விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது.

image

அதில், “எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் துறையின் இரண்டாம் ஆண்டு MS ஆராய்ச்சி படித்து வரும் மாணவர் நேற்று மரணமடைந்துள்ளார். ஐஐடி கல்வி வளாகத்தில் படித்து வரும் மாணவர்கள்/ ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் நிறுவனம் தொடர்ந்து முயற்சிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கப்படுகிறது. பல்வேறு ஆலோசனைகளின் அடிப்படையில் இதுபோன்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இம்மாணவரின் பெற்றோர் சென்னை வந்தடைந்துள்ளனர். இந்த துரதிர்ஷ்டவசமான தருணத்தில் குடும்பத்தினரின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை ஐஐடியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் அவரை மீட்டு கோட்டூர்புரம் காவல் துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலைக்கு முயல்வது குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை கிண்டி ஐ.ஐ.டி நிறுவனத்திற்கு முன்பு இன்று நடத்தப்பட்டது. அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தைச் சார்ந்த ஏராளமான மாணவர்கள் “சென்னை ஐஐடியில் தொடரும் தற்கொலைகளுக்கு தீர்வு காணும் வகையில் நீதி விசாரணை வேண்டும்; உயர்க்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கிடை அமல்படுத்த வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளரை சந்தித்துப் பேசிய இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி “இந்தியா முழுவதும் உள்ள உயர்க்கல்வி நிறுவனங்களில் நிகழும் மாணவர்களின் தற்கொலைகளுக்கு தீர்வு காண நீதி விசாரணை வேண்டும். சென்னை ஐஐடியில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து சென்னை ஐஐடி நிறுவனம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள 130 உயர்க்கல்வி நிறுவனங்களில் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.

ஐஐடியில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் தற்கொலையை தடுக்கும் வகையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். ஐஐடியில் இதற்கு முன்னர் பாத்திமா லத்தீப் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோரின் தற்கொலைகள் நடந்தன. அப்படியான நிலையில் தற்போது நடைபெற்ற தற்கொலை நிகழ்ந்துள்ளது. இவையாவும் உயர்க்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடியில் தொடரும் தற்கொலை மரணங்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்” என்று தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments