பிரபலங்களுக்கு போலி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய நபரை காவல்துறை கைதுசெய்துள்ளது.
சென்னையை சேர்ந்த `சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில்’ என்ற தனியார் அமைப்பு சார்பில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி விருது வழங்கும் விழாவொன்று நடத்தியது. அதில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அந்தவகையில் இசைஅமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு, நிகழ்ச்சி தொகுப்பாளரான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி மற்றும் சுதாகர் உள்ளிடோருக்கு கௌரவ முனைவர் பட்டம் மற்றும் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
இந்நிலையில் தனியார் அமைப்பொன்றின் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கியதும், நிகழ்ச்சிக்கு அண்ணா பல்கலைகழகம் இடம் வழங்கியதும் சர்ச்சையை உருவாக்கியது. அதைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும், கையெழுத்து தவறாக முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தரப்பிலும் மாம்பலம் காவல் நிலையத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டன.
அதன்படி நிகழ்ச்சி நடத்திய அமைப்பின் இயக்குனரான ராஜு ஹரிஷ் என்பவர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைத்து விசாரணை தொடங்கினர். அவர் தலைமறைவானதால், காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவான அந்த வழக்கில், தனக்கு முன்ஜாமின் வேண்டுமென கோரி ராஜு ஹரிஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அதை சென்னை உயர்நீதிமன்றம் மறுத்தது. தொடர்ந்து காவல்துறையால் தீவிரமாக தேடப்பட்டுவந்த ஹரீஷ், தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஹரீஷை, வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அவரது மனைவியின் வீட்டில் பதுங்கி இருந்தபோது தனிப்பட போலிசார் கைது செய்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments