சிகரெட் கொடுக்க மறுத்த பன்னாட்டு நிறுவன ஊழியரின் மூக்கை உடைத்த நபர்மீது வழக்குத் தொடர்ந்துள்ளதாக குருகிராம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 2ஆம் தேதி, டி.எல்.எஃப் Phase-3 பகுதியிலுள்ள யு - பிளாக் வளாகத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. டெல்லியின் வார்கா பகுதியைச் சேர்ந்த சௌரவ் வர்டாக்(25) என்ற இளைஞர் எம்.என்.சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். போலீசாரின் கூற்றுப்படி குற்றவாளியின் பெயர் பவண் என்கிற போலா(22). நாத்துபுர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞரான இவர் பாதுகாவலர்களை தாக்கிவிட்டு டி.எல்.எஃப் வளாகத்திற்குள் நுழைந்து சௌரவை தாக்கியுள்ளார். சம்பவம் நடந்த சிலமணிநேரங்களிலேயே பவணை கைதுசெய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், மார்ச் 2ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் அலுவலத்திற்கு அருகிலுள்ள காலி இடத்தில் சிகரெட் பிடிக்க சென்றுள்ளார் சௌரவ். அங்கு தனது நண்பருடன் வந்த பவண், உரையாடலை தொடங்கும் முன்பே சிகரெட்டை தருமாறு சௌரவிடம் கேட்டிருக்கிறார். சௌரவ் தரமறுக்கவே தகாத வார்த்தைகளால் மோசமாக பேசியுள்ளார். சச்சரவை தவிர்க்க நினைத்த சௌரவ், குற்றவாளியை புகைப்படம் எடுத்துக்கொண்டு, அங்கிருந்து வேகமாக அலுவலகத்திற்குள் வந்ததாகத் தெரிகிறது. ஆனால் அவரை பின்தொடர்ந்து வந்த பவண், சௌரவின் முகத்தில் பலமுறை குத்தியதால் மூக்கு உடைந்துள்ளது. பாதுகாவலர்கள் மற்றும் பிற அலுவலக ஊழியர்கள் அவரை மிகவும் போராடி தடுத்துள்ளனர்.
இதனையடுத்து சௌரவ் போலீசில் புகாரளித்தன்பேரில், இந்திய சட்டப்பிரிவுகள் 323 மற்றும் 506-இன் கீழ் முதற்கட்ட வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக டி.எல்.எஃப் Phase-3 போலீசார் தெரிவித்துள்ளனர். பார்ப்பதற்கே சந்தேகத்திற்கிடமாக தெரிந்ததால் குற்றவாளி மற்றும் அவருடைய நண்பரிடம் பேச்சுக்கொடுக்காமல் சிகரெட்டையும் கொடுக்காமல் தவிர்த்ததாக சௌரவ் தனது புகாரில் தெரிவித்திருக்கிறார்.
”சந்தேகத்திற்கிடமாக தெரிந்த அந்த நபர், என்னை பார்த்தால் பிச்சைக்காரன் போல் தெரிகிறதா என்று என்னிடம் கேட்டார். பின்னர் என்னை தகாத வார்த்தைகளால் பேசத்தொடங்கினார். அப்போதுதான் அவரை புகைப்படம் எடுத்துவிட்டு உடனடியாக அங்கிருந்து அலுவலக வளாகத்திற்குள் வந்துவிட்டேன். இருப்பினும், அவர் என்னை பின்தொடர்ந்து வந்துவிட்டார். வளாகத்தின் நுழைவுவாயிலில் ஒரே ஒரு பாதுகாவலர் மட்டும் இருந்தார். அவர் அந்த நபரை சந்தேகித்தபோது, அந்த நபர் அலுவலகத்தைச் சேர்ந்த ஊழியர் இல்லை என எச்சரித்தேன்.
பாதுகாவலர் தடுக்க முயன்றபோது அந்த நபர் அவரை தாக்கியதுடன், என்னுடைய முகத்திலும் பலமுறை குத்திவிட்டார். என்னை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் என்னுடைய மூக்கு எலும்பு உடைந்துவிட்டதாக தெரிவித்தனர்” என்றார்.
குற்றவாளியை கைதுசெய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பவணின் போக்கிரத்தனத்தால் அவருடைய குடும்பமே பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். எப்படியாயினும், பவணுக்கு தற்போது ஜாமின் கிடைத்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments