விராலிமலை அருகே பிரசித்தி பெற்ற திருநல்லூர் கிராமத்திலுள்ள பெரிய கண்மாயில் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ளது தென்னலூர் எனப்படும் திருநல்லூர். இந்த கிராமத்தில் உள்ள 400 ஏக்கர் பரப்பளவிலான பெரிய கண்மாயில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடித் திருவிழா இன்று காலை முதல் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் போற்றும் வகையில் விமர்சையாக நடைபெற்று வருகிறது.
கிராம முக்கியஸ்தர்கள் முத்துமாரியம்மன் கோயிலில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் கிராமங்களில் அமைதி நிலவி மக்கள் வளமுடன் வாழ பிரார்த்தனை செய்து வெள்ளை துண்டு வீசியபின் மீன்பிடித் திருவிழா உற்சாகமாகத் தொடங்கியது.
இதில், தென்னலூர் மட்டுமின்றி விராலிமலை, இலுப்பூர், மலைக்குடிப்பட்டி, பேராம்பூர், ராஜகிரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பாரம்பரிய மீன்பிடி சாதனங்களான கச்சா, வலை, பரி, கூடை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களைக் கொண்டு நாட்டு வகை மீன்களான கெளுத்தி, கெண்டை, அயிரை, விரால் உள்ளிட்ட மீன்களை பிடித்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனோ பாதிப்பின் காரணமாக இக்கிராமத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு உற்சாகமாகவும் நிம்மதியாகவும் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது அப்பகுதி கிராம மக்களிடையே மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/pVhXD14
via IFTTT
0 Comments