சி.வி.சண்முகம் பேசும் போது தன்மையோடு பேச வேண்டும் இல்லை என்றால் லுங்கியுடன் அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் வரும் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி பேசும்போது, “சி.வி.சண்முகம் இரண்டு நாட்களுக்கு முன்பு காவல்துறையை மிக அநாகரிகமாக பேசியுள்ளார். காவல்துறை கோபாலபுரத்தில் மாவாட்டிக் கொண்டிருக்கிறதா?. சிவி.சண்முகம் போன்றவர்களுக்கு திடீரென ஜானகி அம்மாள் ஞாபகம் வந்துள்ளது. நாளை மேல் முறையிட்டு வழக்கு தாக்கல் செய்யப்படும். மக்கள் ஓ.பிஎஸ் பக்கம் இருக்கிறார்கள் என்பது நிரூபணம் ஆகிவிட்டது.
சி.வி.சண்முகம் தன்மையோடு பேச வேண்டும் இல்லையென்றால் லுங்கியுடன் அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் வரும். இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் நான் இல்லை என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். அதனால் அவர் தற்போது பதவியில் இல்லை. ஓ.பி.எஸ் மட்டும் தான் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். நீதிமன்ற தீர்ப்பில் இந்த பிரச்னையின் பிரதான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது வந்த தீர்ப்பு ஓ.பி.எஸ்-க்கு சாதமாகத்தான் வந்துள்ளது. ஒருவேளை சின்னம் மற்றும் கட்சி முடக்கப்பட்டால் அதனை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
எடப்பாடி பழனிசாமி இப்போது வந்தாலும் ஓ.பி.எஸ் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார். ஓ.பி.எஸ்-க்கு வருவது தானாக சேர்ந்த கூட்டம் எடப்பாடி பழனிசாமி பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கிறார்.
அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் நிறைய வீடியோ ஆதாரங்கள் வெளிவரும். சி.வி.சண்முகம் கொடுத்த புகார் நிரூபிக்கப்படவில்லை என்றால் சட்டம் அவர் மீதுதான் பாயும்.
முன்னாள் சட்டத்துறை அமைச்சர், தமிழக டிஜிபி மாவாட்டுகிறார் என கூறியதை தமிழக முதல்வர் கேட்டு அமைதியாக இருப்பது வேதனையாக உள்ளது. அதிமுக மீண்டும் எழுந்து நடக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு தான் ஓபிஎஸ் எடப்பாடியை அழைத்திருக்கிறார். அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் மது அருந்தியது யார்? குத்தாட்டம் போட்டது யார்? என்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவரும். அதிமுக பொதுக்குழு செல்லும் என்கிற இரு நீதிபதி தீர்ப்பை எதிர்த்து நாளை மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. டாஸ்மார்க் சிவி.சண்முகத்திற்கு எதுவும் புரியாது” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/gbokPew
via IFTTT
0 Comments