கோவில்பட்டி அருகே ஆசிரியரை பெற்றோர்கள் ஓட ஓட விரட்டி தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் தலைமையாசிரியருக்கும் அடி உதை கிடைத்துள்ளது. இதுகுறித்து மூன்று பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மகள் செல்வி. செல்விக்கு திருமணமாகி அவரது கணவர் சிவலிங்கத்துடன் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் வசித்து வருகிறார். சிவலிங்கம் மற்றும் செல்வி தம்பதிக்கு பிரகதீஸ்(7) என்ற மகன் உள்ளான். பிரகதீஸ் தனது தாத்தாவான முனியசாமியுடன் கீழநம்பிபுரத்தில் வசித்து வருகிறார். அங்குள்ள அரசு உதவி பெறும் இந்து தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அந்தப் பள்ளியில் வீரப்பட்டியைச் சேர்ந்த குருவம்மாள் (60) தலைமை ஆசிரியராகவும், தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த பாரத் என்பவர் ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வகுப்பில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது பிரகதீஸ் கீழே விழுந்ததாக தெரிகிறது. மெதுவாக விளையாடும் படி ஆசிரியர் பாரத் சத்தம் போட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் மாணவர் பிரகதீஸ் வீட்டுக்குச் சென்று தனது தாத்தா முனியசாமியிடம் ஆசிரியர் பாரத் தன்னை அடித்ததாகக் கூறியுள்ளார். இதையடுத்து இன்று மதியம் பள்ளிக்குச் சென்ற சிவலிங்கம், அவரது மனைவி செல்வி மற்றும் செல்வியின் தந்தை முனியசாமி ஆகியோர் எப்படி பையனை அடிக்கலாம்? என்று ஆசிரியர் பாரத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றவே ஆசிரியர் பாரத்தை அவதூறாக பேசியது மட்டுமின்றி, கொலை மிரட்டல் விடுக்கும் நோக்கில் பேசியுள்ளனர்.
மேலும் காலணியை கழற்றி கையில் பிடித்துக்கொண்டு ஆசிரியர் பாரத்தை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இதை தடுக்கவந்த பள்ளி தலைமை ஆசிரியர் குருவம்மாளையும் தாக்கி உள்ளனர். இது குறித்து கேள்விப்பட்டதும் எட்டயபுரம் போலீசார் விரைந்து சென்று தாக்குதலில் ஈடுபட்ட சிவலிங்கம், செல்வி மற்றும் முனியசாமி ஆகிய மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மூவர் மீதும் அத்துமீறி பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர்களை அடித்து, காலணியால் தாக்கிய குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments